நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல்

🕔 November 20, 2017

– ராஸி முகம்மத் –

யா விக்கி,

முதலில் உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். அந்த தைரியமும் ஆளுமையும், ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது.

எங்கள் மக்களுக்குக்காகப் பேசுவதற்கு எங்களிடம் யாருமில்லை. நாங்கள் தெரிவு செய்த அரசியல்வாதிகளைத்தான் நீங்கள் கைக்குள் போட்டுக்கொண்டீர்களே. ஆனாலும் நன்றியுள்ளவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். உப்பிட்ட உங்களை உள்ளளவும் நினைக்கிறார்கள். சொஞ்சோற்றுக்கடன் தீர்க்க துரியோதனனோடு இருக்கிறார்கள் எங்கள் கர்ணர்கள். அதுதான் – பாண்டவர் சமூகம் நாங்கள் பேச்சிழந்து நிற்கிறோம்.

“மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லீம்களே வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்கள்” என்றொரு கருத்தைக் கூறியிருக்கிறீர்கள். ஐயா வரலாறு பேசுகிறீர்களா? நாமும் வரலாறு பேசுவோமா?

இலங்கை முஸ்லிம்கள் இருவகைப்படுவார்கள் என்றும், அவர்கள் மத்திய கிழக்கில் இருந்து வந்த முஸ்லீம்கள், தென்னிந்தியாவில் இருந்து மரக்கலத்தில் வந்த முஸ்லீம்கள் என்றும் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா? படிக்க ஆவலாய் இருக்கிறது.

கிழக்கைச் சேர்ந்த நான் மத்திய கிழக்கானா? மரக்கலக்காரனா? என்று பார்க்கவேண்டும். மத்தியைச் சேர்ந்த என் மனைவி மரக்கலக்காறியா இல்லை மத்திய கிழக்குக்காறியா என்று பார்க்கவேண்டும்.

ஒரு வேளை உங்கள் ரகசியப் புத்தகத்தில் நான் மத்தியகிழக்கானாக இருந்து, எனது மனைவி மரக்கலக்காறியாக இருந்தால் எனது இரண்டு குழந்தைகளையும் மரக்கலத்தில் ஏற்றுவதா? இல்லை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதா? என்ற சிக்கலுக்கு நீதிபதி நீங்கள்தான் தீர்ப்புத் தரவேண்டும்.

ஐயா விக்கி,

எனக்கு மரக்கலமும் தெரியாது, மத்திய கிழக்கும் தெரியாது. அதை எனக்குத் தேடவும் முடியாது. ஆனால் ஒன்று எனக்குத் தெளிவாகத் தெரியும்.

நான் முஸ்லிம். நான் இலங்கையன். எனது தாய் மொழி தமிழ். நான் தமிழன் அல்ல. எனது இந்த அடையாளத்தை மறைத்து – என்னைப் பேச்சுவார்த்தைகளின் போது, ‘ஒரு குழு’ என்று அடையாளப்படுத்திய அனைவரும் தவறிழைத்தவர்கள்.

ஐயா,வடக்கையும் கிழக்கையும் இணைக்காமல் இருப்பது தமிழர்களுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்றீர்கள். வடக்கையும் கிழக்கையும் இணைப்பது முஸ்லிம்களுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்கிறோம் நாம். இப்போது என்ன செய்வது?

நேரடியாகவே சொல்கிறேன். உங்களோடு ஒன்றாக வாழ முடியாது – வாழவே முடியாது. உங்கள் அடையாளத்தையும், தனித்துவத்தையும் பேண நீங்கள் போராடுவது இயற்கையின் நீதி என்றால், எங்கள் அடையாளத்தையும் எங்கள் தனித்துவத்தையும் காக்க நாங்கள் போராடுவதும் அதே இயற்கை நீதிதான் நீதிபதியே.

ஏன் உங்களோடு வாழ முடியாது தெரியுமா? வரலாறு சொல்லவா? செவி மடுப்பீரா?

போராட்டங்களின் ஆரம்ப காலங்கள் நினைவிருக்கிறதா? குண்டடிபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய் ‘ராத்தா’ என்று கொண்டு ஓடிவருவார்கள் ஞாபகமிருக்கிறதா? காயத்திற்குக் கட்டுப்போட்டவர்கள் இந்த மரக்கல மனிதர்கள்தான் மறந்துவிட்டீர்களா?

‘தடபட’ என்று பூட்ஸ் சத்தங்கள் கேட்கும். ராணுவத்தினர் கதவை இடிப்பார்கள். எங்கள் வீட்டுக் கூரைக்குள் ஒழித்துவைத்து விட்டு, கதவைத் திறந்தவர்கள் இந்த மத்திய கிழக்கர்கள்தான் மறந்துவிட்டீர்களா?

நீங்கள் போர்களம் கண்டபோது பசியில் இருந்த உங்கள் மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் ஒரு பிடி அரிசியும், உருளைக் கிழங்குகளையும் பையில் போட்டு அனுப்பிவைத்தவர்கள் எல்லாம் இந்த மரக்கலக்காறனும், மத்திய கிழக்கானும்தான் மறந்திருப்பீர்கள்.

இறுதியில் என்ன செய்தீர்கள் இந்த மரக்கலக் காறனுக்கும், மத்திய கிழக்கானுக்கும்?

இரவோடிரவாக எம்மைத் துரத்தியடித்தீர்கள். போனவர்கள் பணம் கொண்டு போகிறார்கள் என்று – எம் பெண்களின் ஆடைகளை களைந்து சோதித்துப் பார்த்தீர்கள். கொண்டு வந்த வானொலிப்பெட்டிகளை உடைத்து நகை தேடினீர்கள். எங்கள் பரம்பரை நிலத்தை விட்டு எம்மை விரட்டியடித்தீர்கள். யுத்தம் முடிந்த பின்னரும் எங்கள் மண்ணுக்கு எம்மைப் போகவிடாமல் தடுக்கிறீர்கள்.

எங்கள் இறைவனை – நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்.

Sri Lanka’s Muslims: Caught in the Crossfire என்றொரு ஆவணமிருக்கிறது வாசித்துப் பாருங்கள்.

உங்களில் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன்னர் கொடுத்த நகையை அப்படியே கொண்டு வந்து ஒப்படைத்த அற்புத மனிதர்களும் உங்களுக்குள் இருக்கிறார்கள்.

யுத்தம் முடிந்து இப்போது காற்றுக் கொஞ்சம் உங்கள் பக்கம் அடிக்கும்போது, அதே பல்லவியைப் பாடிக்கொண்டு வருகிறீர்கள். நீங்கள் மாறவே இல்லை ஐயா. மாறவே இல்லை.

அன்றே சொன்னார்கள் எம் பாட்டன்கள். யுத்தம் முடிந்தால் இனி வேட்டையாடப்படுவது நாங்கள்தான். ஓநாய்களுக்கு  ஆட்டுக்குட்டி எந்த நிறத்தில் இருந்தால்தான் என்ன?

ஐயா இந்த விளையாட்டு இனி வேண்டாம்.  உங்களுக்கு உங்கள் அடையாளம். எங்களுக்கு எங்கள் அடையாளம்.

அடையாளம் இழந்து உரிமை இழந்து வாழும் சமுகத்தின் வலி எங்களை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும். வலியைப் புரிந்தவர்கள் இந்த வலி இன்னொருவருக்கு வரக்கூடாது என்று நினைக்கவேண்டுமே ஒழிய, நான் பெற்ற வலியை நீயும் பெறத்தான் வேண்டும் என்று எண்ணக்கூடாது.

வடக்கு இனி வடக்காகவே இருக்கட்டும். கிழக்கும் கிழக்காகவே இருக்கட்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழப்பழகுவோம். அடையாளங்களை அங்கீகரிப்போம்.

நேற்று கொக்கரித்துத் திரிந்த கோழி – இன்று கறியானதுபோல் இன்று கொக்கரிக்கும் கோழி நாளை கறியாகலாம்.

வடக்கு வடக்காக இருக்கட்டும். கிழக்கு கிழக்காக இருக்கட்டும்.

இந்த மத்திய கிழக்கு, மரக்கல மனிதனின் வரலாறு புரிகிறதா?

மேலுள்ள மடலை புரிந்து கொள்வதற்காக: மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்