பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் செயலமர்வு

🕔 November 20, 2017

– றிசாத் ஏ காதர் – 

‘பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வொன்று இன்று திங்கட்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மற்றும் அறபு கற்கைகள் பீட கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையமும் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இச் செயலமர்வில் பெண்கள் வலுவூட்டல் தொடர்பிலான கருத்துரைகள் மற்றும் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன.

இரு அமர்வுகளாக நடைபெற்ற மேற்படி செயலமர்வில் பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களினால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

மேற்படி நிகழ்வின் முதலாவது அமர்வில் MWRAF அமைப்பின் பெண்கள் இணைப்பாளர் யு.ஐ. ஹபீலா, தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, சாய்ந்தமருது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிஸ்வானுல் ஜன்னா கருத்துரையாற்றினர். இதே அமர்வில் ‘பெண்கள் வலுவூட்டல் ஊடாக கல்வி மற்றும் ஆரோக்கியம்’ எனும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழ பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் உரையாற்றினார்.

இந்நிகழ்வின் இரண்டாம் அமர்வில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளை தடுப்பதுக்கான கொள்கை வகுப்பு தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கருத்துரை நிகழ்த்தினார். மேலும் சமூகத்தில் வயது முதிர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதி டொக்டர் ஏ.எம். ஜெமீல் உரையாற்றினார். நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் நிபுணர்களான சகீனா அலிகான், தினேஷ் ஜயதிலக ஆகியோர் வடமாகாணத்தில் பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வாழ்வாதார நிகழ்ச்சித்தட்டங்கள், அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கினர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீட துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.எம். பாசில், இச் செயலமர்வில் கலந்து கொண்டு, நிகழ்வுகளை நெறிப்படுத்தியிருந்தார்.

மேற்படி செயலமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாரளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், பெண்கள் வலுவூட்டல் தொடர்பிலான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, தமது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்