புத்தரை பச்சை குத்தியமைக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு, நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவு

🕔 November 16, 2017

புத்தரின் உருவத்தினை தனது தோள் பட்டையில் பச்சை குத்தியிருந்தார் எனும் காரணத்தைக் காட்டி, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பிரித்தானிப் பெண்ணுக்கு நஷ்டஈடாகவும், வழக்குச் செலவாகவும் 08 லட்சம் ரூபாவினை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.

புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்தியிருந்தார் எனக் குற்றம் சாட்டி, குறித்த பிரித்தானியப் பெண்ணை பொலிஸார் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்தமையின் மூலம், அந்தப் பெண்ணின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இதன்போது தெரிவித்தது.

நயோமி கொல்மன் எனும் 40 வயதுடைய பிரித்தானிய பெண், 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

குறித்த பெண், ஓர் உளநலத் தாதியாவார்.

மேற்படி பெண்ணுக்கு நஷ்டஈடாக 05 லட்சம் ரூபாவினையும் வழக்குச் செலவாக 02 லட்சம் ரூபாவினையும் அரசாங்கம் வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

மேலும், குறித்த பெண்ணை கைது செய்த, கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் அப்போதைய நிலையப் பொறுப்பாளர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகிய இருவரும், தமது சொந்தப் பணத்திலிருந்து தலா 50 ஆயிரம் ரூபாவினை குறித்த பெண்ணுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எந்தவொரு நியாமான காரணமுமின்றி, பொலிஸார் தன்னைக் கைது செய்து, தடுத்து வைத்திருந்ததாகத் தெரிவித்து, மேற்படி பெண் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மேற்படி பெண் – பௌத்தத்தை ஏற்றுக் கொண்டு தாய்லாந்து, இந்தியா, கம்போடியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் கருத்தரங்குகளிலும், தியானங்களிலும் கலந்து கொண்டதாக பொலிஸாரிடம் அப்போது தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்