வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியோம்; நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் உறுதிபடத் தெரிவிப்பு

🕔 November 9, 2017
– ஆர். ஹசன் –
டக்கும் கிழக்கும் இணையும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாது என்றும், அதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு இணைப்பானது இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும், வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும் எனவும் எனவும் இதன் போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் கூறுகையில்;

“தற்போதைய அரசியலமைப்பில் இருபதுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையிலும் புதிய அரசியலமைப்பினை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. யுத்தம் நிறைவடைந்தாலும் இனப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இந்த நாட்டில் சகல இனங்களும் தமது உரிமைகளை பெற்றுக்கொண்டு அந்நியோன்யமாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில், இந்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பிரதமர் நிர்வாக ஆட்சிமுறைமையை கொண்டுவர வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

உண்மையிலேயே சிறுபான்மை சமூகங்களுக்கு உள்ள பாதுகாப்பு – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையாகும். கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களின் வாக்குகளின் ஊடாகத்தான் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட முடியும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முஸ்லிம் சமூகம், இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஒருவரைத் தெரிவு செய்வதற்கான ஆதரவை வழங்குகின்ற போது, தமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான வழியினை அடைகின்றனர். ஜனாதிபதி வேட்பாளருடன் நடைபெற்ற பேச்சுக்கள் ஊடாக, முஸ்லிம் சமூகத்துக்கு விரோதமான சக்திகளை நாம் தோற்கடித்திருக்கின்றோம் என்பதை கண்கூடாகக் கண்டிருக்கின்றோம்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில் தற்போது வழங்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி ஆட்சி முறைமையே தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக  வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவு காணப்படுகின்றது. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் விடயத்தில் சில அம்சங்களளை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 42 சதவீதமாக வாழ்கின்றார்கள். நாட்டிலே கிழக்கு மாகாணத்தில் மட்டுமே முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நாட்டின் வரலாற்றினை எடுத்துப் பார்க்கையில் வடக்கும் கிழக்கும் இணைந்து இருந்தபோது இரத்த ஆறு ஓடியது. கிழக்கு மாகாணத்திலுள்ள மூவினங்களும் பிரிந்திருந்தன. தற்போது கிழக்கு மாகாணம் வடக்கிலிருந்து பிரிந்து தனியாக இருக்கின்றது.

கிழக்கு மாகாணம் தற்போது அமைதியாக இருக்கின்றது. கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் சகோதரர், முஸ்லிம் சகோதரர் என மாறிமாறி முதலமைச்சராக இருந்துள்ளார்கள். மூன்று இனக்குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவையொன்று காணப்பட்டது. இந்த விசேட தன்மையானது ஏனைய மாகாணங்களில் இல்லை. இவ்வாறு மூன்று இனங்களும் ஒற்றுமையாக, அமைதியாக, சகோதரத்துவத்துடன் வாழும் மாகாணத்தினை வடக்கு மாகாணத்துடன் இணைக்க வேண்டியதன் அவசியம் என்ன?

1987  ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஜே.ஆர் ஜயவர்தன இரவோடு இரவாக வடக்கினையும் கிழக்கினையும் இணைத்தார். அவ்வாறு நிர்வாகமுறை மாற்றப்பட்டபோது, கிழக்கு மாகாண மக்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக மாற்றப்பட்டனர்.

ஆகவே, கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களை சிறுபான்மையினராக்கும் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க முடியாது. வடக்கும் கிழக்கும் தனித்தே இருக்க வேண்டும்.

வடக்குடன் கிழக்கு இணைந்திருந்ததாக வரலாறொன்று இல்லை. வடமத்திய மாகாணத்தினை இணைத்து ஆட்சி நடத்தியமைக்கான வரலாறு இருக்கின்றது. எனவே, வடக்கினை கிழக்குடன் இணைக்க வேண்டும் என்று கோருவதில் நியாயமில்லை.

ஆகவே, வடக்குடன் கிழக்கினை மீண்டும் இணைத்து  இனமொன்றின் விகிதாசாரத்தினை குறைத்து இரத்த ஆறு ஓடுவதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறானதொரு புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது. இந்த நாட்டில் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பின் மூலம் இனங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொண்டு வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும்.

தற்போதைய நிலையில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த எவராலும் முதலமைச்சராகவோ அல்லது அமைச்சராகவோ இருக்க முடியும். அவ்வாறு மூவினம் இணைந்து ஆட்சி செய்து அமைதியாக வாழும் ஒரு மாகாணமாக கிழக்கு இருக்கையில், வடக்கும் கிழக்கும் இணையவேண்டும் என்று கூறுபவர்கள் அதற்கான காரணம் என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டும். 

அதேநேரம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் உரியமுறையில் பகிரப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 13ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் – அமைச்சரவைத் தீர்மானங்களாலும், சுற்று நிருபங்களாலும் முடக்கப்பட்டுள்ளன. அவ்வாறு 13ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பயன்படுத்தி மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை உள்ளடக்கிய வகையில் அதிகாரங்கள் வழங்க வேண்டும். ஆனால், மாகாண சபையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்புக்கூறும் வகையிலான பிரதிநிதித்துவம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக எந்த தியாகங்களையும் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதிக்கின்ற முறைமைக்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தற்போது 21 முஸ்லிம் பிரதிநிதிகள் காணப்படுகின்றனர். அவர்களை ஐந்து ஆறு பிரதிநிதிகளாக குறைப்பதற்கு இடமளிக்க முடியாது. 10 சதவீதமான முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தும் உரிய நாடாளுமன்ற தேர்தல் முறைமையொன்றுக்கே நாம் முழுமையான ஆதரவளிப்போம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்