எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல்

🕔 November 6, 2017

நாட்டில் எந்த விதமான ஏற்றுக் கொள்ளத்தக்க காரணங்களுமின்றி, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையானது, இந்த அரசாங்கத்தின் குறைபாடாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்;

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் ஒருபொற்காலமாகும் என்பதை, இந்த அரசாங்க காலத்தில் நடக்பகும் பல விடயங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்றுதான் இலங்கையில் நிலவிக்கொண்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியில் யுத்தம் நிலவிய சந்தர்ப்பத்தில் கூட, எரிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை.

ஆனால், இன்று நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. யாரும் வேலை நிறுத்தம் செய்யவில்லை. இப்படியான எரிபொருள் தட்டுப்பாடு எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை கூட வெளியில் கூறாமல் அரசாங்கம் மறைக்கின்றது. அதற்கான காரணத்தை வெளியில் கூறினால் தங்களின் ஆட்சியை பார்த்து மக்கள் சிரித்து விடுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கிறதோ தெரியவில்லை.

சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற போதும், இவ் அரசாங்கம் அவசரமாக எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. எரிபொருள் தட்டுப்பாடு நிலவினால் நாடே ஒரு கனம் ஸ்தம்பித்துவிடும். தற்போது இலங்கை நாடு அரை ஸ்தம்பித நிலைக்கு வந்துள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு கணமும் பல கோடி பொருளாதார இழப்புக்கள் ஏற்படும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் இந்த அரசாங்கம் அக்கறையற்ற விதத்தில் செயற்படுகின்றமை, இலங்கை நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்கு உட்படுத்தும்.

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம், இந்த அரசாங்கத்தில் நிலவும் குறைபாடுதானே தவிர, வேறு காரணங்கள் எவையும் இல்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்