பாடசாலைகளில் கல்வியை விடவும், ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய தேவை உள்ளது: மாகாண பணிப்பாளர் நிஸாம்

🕔 November 6, 2017
– பி. முஹாஜிரீன் –

பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் 10 வகுப்பு  ஆரம்பிப்பதற்கான  அனுமதி அடுத்த வருடம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தெரிவித்தார்.

அதேவேளை,  ஹிக்மா வித்தியாலயத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 2018ஆம் ஆண்டு, மாடிக்கட்டடம் ஒன்றும் பெற்றுத் தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தின்  பாடசாலைச் சமூகத்தினர் கேட்டுக் கொண்டமைக்கு இணங்க இந்த உறுதிமொழிகளை மாகாணப் பணிப்பாளர் வழங்கினார்.

பாலமுனை பிறைன்ஸ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அல் ஹிக்மா வித்தியாலயத்தில், கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.ரி. தஸ்தகீர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“கிழக்கு மாகாணத்திலே வருடமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 2200 நாட்களுக்கு மேல் பாடசாலைகளில் கழித்துவிட்டு, இறுதியில் ஒன்றுமில்லாமல் பாடசாலையை விட்டும் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஒரு மாணவன் பாடசாலைக்கு நம்பிக்கையோடு வருகின்ற போது, அந்த நம்பிக்கையை பாதுகாக்கின்ற நிலைமையிலிருந்து உயர் பாடசாலைகள் விலகிச் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் க.பொ.த. சாதாரண தரம் வரை, புதிதாகத் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகள்தான் அதிகமாகவும், மிக மோசமாகவும் பரீட்சை முடிவுகளைப் பெற்றிருக்கின்றன.

எனவே, மாணவர்களை பலிக்கடாக்களாக்கள் ஆக்குவதற்கு ஒருபோதும் பாடசாலைகளுக்கு புதிய தரமுயர்த்தல்களைச் செய்ய முடியாது. மாணவர்கள் தூர இடங்களுக்குச் சென்று கற்க முடியாது என்பதற்காக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கற்று, மாணவர்கள் தோல்வி அடைவார்களாயின், அவர்கள் படிப்பை விடுவதும், பரீட்சையில் சித்தியடையாமல் இருப்பதும் ஒன்றுதான்.

பெரும்பாலான பாடசாலைகள் க.பொ.த. சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புகின்ற வேலையைத்தான் செய்கின்றன. எனது 30 வருடத்திற்கு மேற்பட்ட கல்வி வாழ்க்கை அனுபவத்திலே, மாணவர்களின் கல்வியைப் பாதிக்கக்கூடிய மூன்று விடயங்களை நான் அவதானித்திருக்கிறேன். முதலாவது, பாடசாலை தரமுயத்தப்படும்போது. அடுத்தது பாடசாலைக்கு நல்ல கட்டட வசதிகள் கிடைக்கின்றபோது. மூன்றாவது, ஆசிரியர்கள் நிறைவாக இருக்கின்றபோது. இந்த மூன்று விடயங்களும் கிடைக்கின்றபோது – அங்கே மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

இதற்கு பல உதாரணங்கள் என்னிடம் உள்ளன. வளங்கள் இல்லாதபோது சாதனை படைத்த பல பாடசாலைகளில், அவர்களுக்கான வளங்களை வழங்கிய பின்னர் வீழ்ச்சி அடைகின்ற நிலைமையை நாங்கள் அவதானித்திருக்கிறோம்.

பிரத்தியேக தனியார் கல்வி நிலையங்கள் ஏன் உருவாகின்றன? அவற்றுக்கான தேவை ஏன் ஏற்படுகின்றது? என்பது பற்றி ஒவ்வொரு படசாலை சார்ந்த சமூகத்தினரும் சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

பொதுவாக பாடசாலைகளை எடுத்து நோக்கினால், பாடசாலை நேரத்தில் பாடசாலைகளுக்குச் சென்று அவதானிக்கின்றபோது தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகளை விட, முஸ்லிம் பாடசாலைகளில் நடைபெறுகின்ற கல்விச் செயற்பாடுகள் பின்னடைவான நிலையில் காணப்படுகின்றன. பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை விடவும், ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது.

ஒரு பிரதேசத்தின் கல்வி, அறிவு என்பது மிக முக்கியமானது. பணம் சம்பாதிப்பதற்கு தந்திரோபாயம் மட்டும்தான் தேவை. அறிவு தேவை இல்லை. அறிவுதான் பணம் சம்பாதிப்பதற்கு தேவை என்றால் அதிகமானவர்கள் பணக்காரர்களாக மாறியிருக்கமாட்டார்கள்.

ஆனால் அது நிலைத்திருக்காது. பணம், அழகு, வாய்ப்பு வசதிகள் எல்லாமே நிலைத்திருக்காது. ஆனால் அறிவு நிலையானது. ஒருவருக்கு அறிவு கிடைத்து விட்டால் அது ஒரு ஆயுதத்தை விட பலமானது என்பதைத்தான் வடக்கு மக்கள் இன்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயுத யுத்தத்தை நம்பி ஆயுதப் போராட்டத்திலே பலமாக இருந்தவர்கள். அந்த ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்த போது, இன்று அறிவை மாத்திரம் வைத்துக் கொண்டு, பல நாடுகளில் மிகப்பெரும் கல்வியியலாளர்களாக மாறி, உயர் பதவிகளை வகித்து, உலகின் முக்கிய நாடுகளை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததுள்ளதுடன், இங்கு தீர்மானிக்கும் சக்தியாக செயற்படுகின்றார்கள். அறிவை பயன்படுத்தி அவர்கள் நினைத்ததைச் சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான அனுபவம் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. இன்று நாங்கள் எதுவுமில்லாமல் இருக்கின்றோம். எதைப்பற்றி இஸ்லாமும் குர்ஆனும் வலியுறுத்துகின்றதோ, அதுதான் முஸ்லிம்களிடத்தில் முதலில் இல்லாமலாகிறது. அறிவீராக, கற்பீராக, ஆராய்ந்து அறிவீராக என்று அல்லாஹ்வும் குர்ஆனும் கூறிக்கொண்டிருக்கின்றபோது, அதை விட்டும் முஸ்லிம்சமூகம் தூரமாகிச் சென்று கொண்டிருக்கிறது.

‘ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்’ என்று எல்லா மதங்களிலும் சொல்லாத ஒரு விடயத்தை இஸ்லாமும் அல்லாஹ்வும் கட்டளை இட்டிருக்கின்றபோது, இன்று வௌ்வேறு வடிவங்களில் பிரிந்து வாழ்பவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர்.. சாய்ந்தமருதும் கல்முனையும் பிரிகின்றோம். அட்டாளைச்சேனையும் பொத்துவிலும் சண்டை பிடிக்கின்றோம். ஏறாவூரும் காத்தான்குடியும் சண்டை பிடிக்கின்றோம். எதை இஸ்லாம் வலியுறுத்துகின்றதோ அதிலிருந்து முஸ்லிம் சமூகம் விலகிச் செல்கின்றது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இதற்கு எமது கல்வியில் ஆன்மீகமும் ஒழுக்கவியலும் மேம்பட வேண்டும்.

இஸ்லாமிய மாணவர்களுக்கு பல முக்கிய ஆன்மீக விடயங்களை நிறையவே கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் ஒருபோதும் பிழையானவர்களல்லர். அவர்கள் மாறுவதற்கு தயாறாக இருக்கின்றார்கள். மாற்றுவதற்கு நாம் தயாறாக இருக்கின்றோமா என்பதுதான் கேள்வியாகும்” என்றார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்   ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவித்த இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெவ்வை, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி. பஸ்மில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம் ஏ. அன்சில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்