கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல்

🕔 November 2, 2017

.தே.கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலில் சில இடங்களில் போட்டியிடப்போவதாக கூறும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எந்த கட்சியை சேர்ந்தவர் என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இப்படி கிழவிகள் போல கதைகள் கூறாமல் அவசரமாக தேர்தலை நடாத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சில இடங்களில் ஐ.தே.க.வும் சு.க.வும் இணைந்து போட்டியிடப்போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அவர் இக் கருத்தை எக்கட்சி சார்பாக கூறுகிறார் என்பதை அறிய விரும்புகிறேன்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து போட்டியிட வேண்டும் எனவும் ஒரு பக்கம் முயற்சிகளை  மேற்கொள்கின்றார்கள். இன்னுமொரு பக்கம் இப்படியான கதைகளையும் அவிழ்த்து விடுகிறார்கள். எது எப்படியோ சு.கட்சியினால் மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சியாலும் தேர்தல்களில் தனித்து வெல்ல முடியாதென்பது தெளிவாகிறது.

அமைச்சர் ராஜிதவின் குறித்த கருத்தினூடாக சில இடங்களில் இரு கட்சிகள் ஒன்றிணைந்து செல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது என்ற விடயம் புலனாகிறது. இதனூடாக பல பகுதிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவே அதிகரித்திருப்பதை அறிந்துகொள்ளலாம். இரு கட்சிகள் அல்ல, ஆயிரம் கட்சிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு எப்படியான வியூகம் அமைத்து வந்தாலும், கூட்டு எதிர்க்கட்சியினரை வெற்றிகொள்ள முடியாது. எங்கள் பின்னால் மக்கள் சக்தி உள்ளது.

இப்படி கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரை கொள்ளச் செய்யாமல், அவசரமாக தேர்தலை உத்தியோகபூர்வமாக அறிவியுங்கள்.

இன்றைய இந்த ஆட்சியில் எமக்கு பாரிய பங்குள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிப்பால நடுநிலை வகித்தார். நாம் களத்தில் நின்று போராடி சு.கட்சிக்கு வாக்குகளை எடுத்துக்கொடுத்தோம். அவ்வாறு பெறப்பட்ட வாக்குகளை வைத்துக் கொண்டு, ரணிலின் கால்களில் ஜனாதிபதி மைத்திரிப்பால விழுந்து சு.க.வை அடிமைப்படுத்தியுள்ளார். இனியும் இப்படியான செயல்களுக்கு நாம் அனுமதி வழங்கப்போவதில்லை.

எமக்கு பேரின மக்களின் பூரண ஆதரவுள்ளது. நாம் கடந்த தேர்தலில் பெறத் தவறிய சிறுபான்மை மக்களினது ஆதரவையும் தற்போது பெற்றுள்ளோம். எங்கள் வெற்றியை யார் ஒன்று சேர்ந்தாலும் தடுக்க முடியாது” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்