கல்முனை மாநகரசபைத் தேர்தல்: தனித்து முஸ்லிம் கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத அவலநிலை உருவாகலாம்

🕔 November 2, 2017

– அஹமட் –

புதிய தேர்தல் முறைமையின் கீழ் கல்முனை மாநகர சபை மொத்தமாக 24 உள்ளுராட்சி வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க, கல்முனை முஸ்லிம் பகுதி 06 வட்டாரங்களாகவும், கல்முனை தமிழர்கள் பகுதி 07 வட்டாரங்களாகவும், மருதமுனை 03, நற்பிட்டிமுனை 02 மற்றும் சாய்ந்தமருது 06 வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்றைய சாய்ந்தமருது பிரகடனத்துக்கு அமைவாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலின்போது சாய்ந்தமருதில் அரசியல் கட்சிகள் எவற்றையும் ஆதரிக்காமல், பள்ளிவாசலின் நெறிப்படுத்தலில் சுயேட்சைக் குழுவொன்று களமிறங்கும் சாத்தியம் அதிகம் உள்ளது.

இந்தக் கணக்கின்படி பார்த்தால், சாய்ந்தமருது போக ஏனைய பிரதேசங்களில் மொத்தமாக 11 வட்டாரங்கள்  முஸ்லிம்களின் கைளில் உள்ளன.

தேர்தல் ஒன்றின் போது, தமிழர்கள் அனைவரும் த.தே.கூட்டமைப்பை ஆதரவளிக்கும் சாத்தியங்களே அதிகம் உள்ளதால், தமிழர்களின் 07 ஆசனங்களையும் த.தே.கூட்டமைப்பு கைப்பற்றிக் கொள்ளும்.

ஆனால், முஸ்லிம்களின் கைகளிலுள்ள 11 ஆசனங்களும் மு.காங்கிரஸ், அ.இ.ம.காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி ஆகியவற்றினால் பிரித்து வெல்லப்படும்.

இந்த நிலையின் போது, தனித்து ஒரு கட்சி  – முஸ்லிம்கள் சார்பில் ஆட்சியமைக்க முடியுமா என்கிற சந்தேகம் இங்கு எழுகிறது.

அல்லது, முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அங்கத்தவர்களும் ஒன்றுபட்டு கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பார்களா என்கிற கேள்வியும் உருவாகிறது.

எதிர்வரும் ஜனவரி மாதம் – இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விடை  கிடைத்து விடும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்