கிரானிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றமும், இன்னும் மாறாத புலிக் குணமும்

🕔 October 29, 2017

– அஹமட் –

ட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச வாராந்த சந்தையில் தொழில் செய்வதற்காக சென்றிருந்த முஸ்லிம் வியாபாரிகளை, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றியுள்ளனர்.

“இங்கு முஸ்லிம்கள் வியாபாரம் செய்யக் கூடாது. அனைத்து முஸ்லிம்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும்” எனக் கூறி, அனைத்து முஸ்லிம் வியாபாரிகளையும் விரட்டியுள்ளார்கள்.

மேலும், ‘இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை’ என்று எழுதிய பதாகைகளையும் தொங்க விட்டிருந்தனர்.

அனைத்துக்கும் மேலாக, கிரான் பிள்ளையார் கோயில் ஒலிபெருக்கி ஊடாக, ‘அனைத்து முஸ்லிம் வியாபாரிகளும் சந்தையிலிருந்து 30 நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும்’ என அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கும் கிரானும்

வடக்கிலிருந்து சுமார் ஒரு லட்சம் முஸ்லிம் சகோதரர்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவாகும் தருணத்தில், கிட்டத்தட்ட அதேபோன்றதொரு இழி செயல், இன்றைய தினம் கிரானில் நடந்திருக்கிறது.

வாழைச்சேனை பிரதேசத்தில் பஸ் நிலையம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில், முஸ்லிம் வியாபாரிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டதாக, தமிழர் சார்பு இணையத்தளங்களே செய்திகளை வெளியிட்டுள்ளன.

அன்றாடம் தொழில் செய்து தமது வாழ்க்கையினை ஓட்டுகின்ற முஸ்லிம் வியாபாரிகளை, கிரானிலுள்ள தமிழர்கள் இவ்வாறு விரட்டியமையினை எந்த நியாயத்தினை முன்னிறுத்தியும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கோயில் இதற்கல்ல 

அதுவும், சமூகங்களிடையே நல்லிணக்கத்தினையும் இறுக்கமான உறவினையும் கட்டியெழுப்புவதற்கு முன்னின்று உழைக்க வேண்டிய – சமய ஸ்தலமொன்றின் ஊடாக, 30 நிமிடங்களுக்குள் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்று அறிவித்தல் விடுத்திருப்பதை ஜீரணிக்க முடியாமலுள்ளது.

கிரானில் நடந்துள்ள முள்டாள்தனத்தைப் போலவே, பதிலுக்கு முஸ்லிம் பிரதேசத்திலும் சில முட்டாள்கள் ஒன்று சேர்ந்து – தமிழ் வியாபாரிகளுக்கு எதிராக  இதேபோன்று நடந்தால், அதற்கு கிரான் பிரதேசத்தவர்கள் பொறுப்புக் கூறுவார்களா?

30 வருட கால கொடிய யுத்தத்திலிருந்து – சமாதானமாக வாழ்வதற்குத் தேவையான அனுபவங்களை நாம் இன்னும்  கற்றுக் கொள்ளவில்லை என்றால், இனி எப்போது கற்றுக் கொள்வது?

முற்று முழுதாக தமிழர்களே வசிக்கும் ஒரு கிராமத்தில், சில முஸ்லிம் வியாபாரிகளுக்கு தொழில் செய்வதற்குக் கூட உரிமையில்லை என்கிற செய்தி, எவ்வளவு கசப்பானது.

இணைய முடியாது

தமிழர்களும் – முஸ்லிம்களும் இணைந்து வாழவே முடியாது என்கிற தீர்மானத்துக்கு, அப்பாவி மக்களை இட்டுச் செல்வதற்கான நிகழ்வுகளாக, இவை போன்றவை இருக்கின்றன என்றால், மறுக்கத்தான் முடியுமா?

நடந்த சம்பவம் சிறியதா, மிகச் சிறியதா என்பது இங்கு கவனிப்புக்குரியதல்ல. வடக்கில் புலிகள் செய்த அதே இழிவான செயலை, இன்று கிரான் பிரதேசத்தவர்கள் செய்திருக்கிறார்கள்.

புலிக் குணத்திலிருந்து இன்னும் சிலர் மீளவேயில்லை என்பதற்கு, கிரான் சம்பவம் நல்லதோர் உதாரணமாகும்.

வேட்டையாடும் மிருக குணத்திலிருந்து மனிதர்கள் மீளாத வரை, இன நல்லுறவை கட்டியெழுப்புவதென்பது ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை என்பதை, இங்கு அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்