உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர

🕔 October 28, 2017

– க. கிஷாந்தன் –

ள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணியையும் (மஹிந்த அணி) இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வட்டகொடை மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை மீன் குஞ்சுகள் இடும் வைபவத்தில் அமைச்சர் அதிதியாகக் கலந்து கொண்டார். இதன்போது அவரிடம், எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“புதிய அரசியல் யாப்பில் நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு திட்டமும் இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கை பிரிப்பதோ அல்லது பௌத்த சமயத்தை முன்நிறுத்துவதோ போன்ற எந்த நடவடிக்கையும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கவில்லை.

நாட்டில் உள்ள மக்கள் அணைவரும் ஒருமித்த சமாதான வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும். இதற்கமைவாகவே அரசியல் யாப்பு அமைய வேண்டும். இதற்கு அப்பால் அரசியல் யாப்பு அமையுமானால் நாம் இந்த அரசியல் யாப்புக்கு எதிராக வாக்களிக்கவும் தயாராக இருக்கின்றோம்.

இதனால் எமக்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை. அதேவேளையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஆழமாக சிந்தித்து நாம் செயல்பட்டு வருகின்றோம். 1983ம் ஆண்டு போல் இது ஆகிவிடக்கூடாது என்பதை நாம் உற்று நோக்குகின்றோம்” என்றார்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் புதிதாக ஒன்றிணைந்த எதிரணி களம் இறங்குகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; “ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சார்ந்தவர்கள்தான். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்த எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் பாரியளவில் வெற்றியை அடைவதற்கு ஒன்றிணைந்த எதிரணியையும் இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்