வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி

🕔 October 28, 2017

– மரைக்கார் –

நாம் ஒரு பதவியில் இருந்து கொண்டு அந்தப் பதவியை தரக் குறைவாகப் பேசுதல் என்பது மடத்தனத்தின் உச்சமாகும். ஆனாலும், இந்த மடத்தனத்தை படித்தவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்ற சிலர், மேதாவித்தனம் என நினைத்துக் கொண்டு செய்து விடுகின்றனர்.

‘அந்த’ ஆசாமி அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தின் உயர் அதிகாரியாக உள்ளார். பிரதேசப் பாடசாலைகளின் அதிபர்களை அழைத்து அண்மையில் அவர் – ஒரு கூட்டம் நடத்தினார்.  கூட்டத்தில் பேச வேண்டிய விடயங்களுக்கு அப்பாலும் பல விடயங்களை அவர் பேசியிருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் தன் புகழ்பாடுவதாக நினைத்துக் கொண்டு, அவர் உட்காரும் கதிரையக் காட்டி இப்படிக் கூறினார்; “இந்தக் கதிரை எனக்குப் பொருத்தமானதல்ல. நான் விஞ்ஞானத்துறையில் படித்தவன். எனது லெவலே வேறு. நான் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல. இஸ்லாமிய நாகரீகம் படித்துப் பட்டதாரியான ஒருவருக்குத்தான் இந்தக் கதிரை பொருத்தமானதாகும்” என்று பேசிக் கொண்டே போனார்.

தான் வகிக்கின்ற பதவியைத்தான், அந்த அதிகாரி இவ்வாறு குறைத்து மதிப்பிட்டுப் பேசியிருந்தார்.

அங்கிருந்த அதிபர்கள் எவருக்கும் குறித்த அதிகாரியின் மடத்தனமான அந்தப் புகழ்பாடல் பிடிக்கவில்லை.

அநேகமானோர், அவர் பேச்சுக்கு முகத்தைச் சுழித்துக் கொண்டார்கள்.

இந்த நிலையில், அங்கிருந்த அதிபர் ஒருவர் – பக்கத்திலிருந்த இன்னொரு அதிபரிடம் சற்று சத்தமாகவே கேட்டு விட்டாராம்; “அப்போ என்ன மயிருக்கு இந்தக் கதிரையில் வந்து குந்தியிருக்கிறார்” என்று.

சிலர் தங்கள் பேச்சினாலேயே, தங்கள் தரத்தை – வெட்டியெறிந்த மயிருக்கும் குறைவானதாக ஆக்கிக் கொள்கின்றனர்.

வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொள்தல் என்பதற்கு, இது நல்லதொரு உதாரணமாகும்.

இனியாவது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி, வாய்க்கும் மூளைக்கும் தொடர்புபடப் பேசுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோளாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்