உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம்

🕔 October 25, 2017

– முன்ஸிப் அஹமட் –

ள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று, நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்பதை அரசாங்கம் அறியும்.  அதனால்தான் மக்களின் அரிப்புக்கு சொறிந்துவிடும் உபாயமாக, ‘ஜனவரி 27ஆம் திகதி உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்று அரசாங்கத்திலுள்ளோர் கூறத் தொடங்கியுள்ளனர் என்று, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

தேர்தலொன்றுக்கான திகதியினைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கத்தக்கதாக, பிரதமர் தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனவரி 27 இல் நடைபெறும் என்று எவ்வாறு தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடைபெறும் என்று, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமர் தலைமையில் கூடிய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன்தான் முதலில் தெரிவித்தார்.

தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம்

தேர்தல் திகதியைப் பிரதமரோ, ஜனாதிபதியோ, சம்மந்தப்பட்ட அமைச்சரோ, அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ தீர்மானிப்பதில்லை. தேர்தல் திகதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கே உள்ளது . இந்த அதிகாரத்தை 19 ஆவது திருத்தச் சட்டம் வழங்கியுள்ளது. இவ்வாறிருக்கையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 27இல் நடைபெறும் என்று, பிரதமர் கூட்டிய அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?

இதிலிருந்தே, பிரதமர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டமானது, போக்குக் காட்டும் ஒரு கூட்டம் என்று புரிகிறது. உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்று நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்பதை அரசாங்கம் அறியும். அதனால்தான் மக்களின் அரிப்புக்கு சொறிந்துவிடும் உபாயமாக இந்தச் செய்தியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்துக்கு ஒத்தூதும் கட்சிகள் – நீண்ட நகங்களோடு சொறிந்துவிடும் கைங்கரியத்தில் பங்கெடுத்துள்ளன.

மனோவின் பந்து

நுவரெலியா மாவட்டத்தில் புதிய சபைகளை உருவாக்கும் விடயத்தில் அரசாங்கம் சாதகமாகச் செயல்படும் என்று அமைச்சர் மனோ கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிழக்கிலும், வடக்கிலும் அப்பிரதேச மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் தமது பகுதிகளிலும் மேலதிக உள்ளூராட்சி சபைகளை உருவாக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக்கான கோசம் அப்பகுதி மக்களிடையே உருக்கொண்டு நீண்ட நாட்களாகி விட்டன. இக்கோரிக்கையானது நுவரெலியக் கோரிக்கைக்கு பல வருடங்களுக்கு முன்பாகவே வைக்கப்பட்டதாகும்.

எனவே சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை புறந்தள்ளி விட்டு, புதிய கோரிக்கையை நிறைவேற்றுவது அரசாங்கத்துக்குக் கடினமாக அமையலாம். இந்தப் புரிதலினால்தான், நுவரெலியா மாவட்டத்தில் புதிய சபைகளை உருவாக்கும் விடயத்தில் அரசாங்கம் ‘சாதகமாக’ தீர்மானம் மேற்கொள்ளும் என்று கூறி, பந்தை ‘எல்லைக்கு அப்பால்’ மனோ கணேசன்  எறிந்துள்ளார் போல் தெரிகிறது.

ஐ.நா.வின் அழுத்தம்

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உடனே நடாத்தவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். 2017 ஆரம்பத்தில் புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்று அரசின் ‘மூலத்தை’ ஐக்கிய நாடுகள் சபை குடைகிறது. இது நடக்காவிட்டால், அடுத்தவருடம் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உங்களுக்கு ‘கட்டிக் காட்டுகிறோம் மருந்து பாருங்கள்’ என்று ஐ.நா வும் மேற்குலகும் கூறுகின்றன.

இதற்கிடையில், “புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையில்லை, இந்ந நடவடிக்கைகளை உடன் நிறுத்துங்கள்” என்று நிக்காயக்கள் ‘ஒற்றைக் காலில்’ நின்று உதைப்பது போல் பாசாங்கு செய்கின்றன.

இந்த நிலையில் அவசரமாக, வரவு – செலவு த் திட்ட அறிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியாக வேண்டும். இதற்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் அனுசரணை அவசியம் தேவையாகும். ஆனால் மேற்குலகின் கடைக் கண் வீச்சு படாமல் இந்த நிதி அமைப்புக்கள் ‘கொடுப்புக்குள்ளும்’ சிரிக்காது.

எனவே, என்ன செய்வது என்று திண்டாடும் அரசாங்கம் ‘குறைக் கொள்ளிக் கட்டையை’ எடுத்து தனது தலையைச் சொறியவும், தமது நீண்ட நகங்களைக் கொண்டு மக்களைச் சொறிந்து விடவும் தயாராகி விட்டமை நன்றாகப் புலப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்