ஞானசாரவுடன் முஸ்லிம் தரப்பின் தொடர் உரையாடல்; பின்னணி என்ன: வெளிச்சப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

🕔 October 20, 2017

– பசீர் சேகுதாவூத் –

பொது பலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருடன் முஸ்லிம் குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் நிகழ்த்திவரும் தொடர் உரையாடல் தொடர்பாக சாதகமாகவும், பாதகமாகவும், சமநிலையாகவும் இணையங்கள் மற்றும் ஓரிரு அச்சு ஊடகங்களில் பேசப்படுகிறது. தனிப்பட்டவர்களினால் முகநூலில் தீவிரமாக விமர்சிக்கப்படுவதையும் காணக் கிடைக்கிறது.

இந்தப் பேச்சுவார்த்தையின் மூலவேர் எங்கிருந்து படர்ந்து வருகிறது என்பதை அறிவதும், அறிந்துகொண்ட பின்னர் ஆய்ந்து பார்த்து இதுபற்றித் தகுந்த கருத்துக்களை இடுவதுமே ஆராக்கியமானதாகும்.

இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான புதிய நகர்வின் ஒரு பகுதியாகும்.

முஸ்லிம்களைக் கையாளவேண்டிய அவசியம் பற்றி, கண்டியில் பிறந்து கொழும்பில் வாழுகிற, மிகப் பிரபலமான முஸ்லிம் சிரேஷ்ட சட்ட வல்லுநர் ஒருவர், ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

அண்மைக் காலமாக ஜனாதிபதி தமிழர்களைக் கையாளும் வகையில் செயல்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. யாழ்ப்பாண விஜயத்தின் போது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரித் தமிழ் அமைப்புக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் நின்றிருந்த இடத்துக்கு ஜனாதிபதி இறங்கிச் சென்று அவர்களுடன் உரையாடினார். இதற்கமைவாக சிவாஜிலிங்கமும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலரும் ஜனாதிபதியைச் சந்தித்தனர். இச்சந்திப்பில் கைதிகளின் விடுதலைக்கான தீவிர சமிக்ஞையை தனதுது செல்பாடுகளூடாக ஜனாதிபதி காண்பித்ததை அவதானிக்க முடிந்தது.

மேலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் சந்திப்பிலும் தமிழர்களின் மனங்களை வெல்லும் விதமாக ஜனாதிபதி நடந்துகொண்டார். விடுதலைக்கு வித்திடும் வகையில் சட்டமா அதிபரையும் இக்கூட்டங்களில் ஜனாதிபதி கலந்துகொள்ளச் செய்திருந்தார். தொடர் நடவடிக்கைகளைப் பொறுத்து விளைவுகள் அமையும்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகாரப் பனிப்போர் இப்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. இக்கட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவுத் தளம் மீண்டும் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறுபான்மை மக்கள் பல முறை தற்காலிகமாகப் பாவிக்கப்பட்ட பின் – தூக்கி வீசப்பட்ட பட்டறிவைப் பெற்றிருப்பினும், அவர்கள் சூழ்நிலைக்கு அடிமைப்பட்டு – உணர்ச்சி மேலீட்டால் உந்தப்பட்டுத் தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் என்பதை சிங்களத் தேசியத் தலைவர்கள் நன்கறிவர்.

அரசியலில் தமிழர்களும் முஸ்லிம்களும் நீண்ட காலமாகத் தனித்துவம் பற்றிய சிரத்தையோடு செயல்பட்டு வந்த போதும், அவர்கள் உள்ளூர ஐக்கிய தேசியக் கட்சியின் சார்புத் தன்மையையே அதிகம் வெளிப்படுத்தியுள்ளனர். ஏனெனில்,கடந்த காலங்களில் இவர்களின் அரசியல் தலைமைகள் ஓரிரு தருணங்கள் தவிர பெரும்பாலும் தமது மக்களுக்கு ‘ஸ்ரீலங்கா தேசிய’ அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற வகையில்தான் வழிகாட்டியுள்ளனர்.மேய்ப்பர்கள் காட்டிய வழித்தடத்திலன்றி வேறேதும் ‘மாற்று’வழிகள் பற்றி சிந்தித்தவர்கள் நேர்வழி தவறியவர்களாகக் காட்டப்பட்டனர்.

ஐ.தே.கட்சிக்கு இருக்கும் ஆதரவு நிலையை மாற்றி 2015 ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு இருந்ததைப் போன்ற சிறுபான்மையர் ஆதரவுத் தளத்தைத் தக்கவைப்பது, ஜனாதிபதியின் தனிப்பட்ட அரசியலின் நீடித்த உயிர்ப்புக்கு அவசியமானதாகும்.

எனவேதான், ஜனாதிபதி தனது புதிய வியூகத்தை நகர்த்தத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு விளைவுதான் ஞானசாரருக்கும் முஸ்லிம் குடிமைச் சமூகப் பிதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெறும் – தவணை முறையிலான தொடர் சந்திப்புகளாகும்.

இந்த நாடகத்தின் தொடர் நிகழ்தல் (Episode) இடை நிறுத்தப்பட்டால், ஞானசா தேரரை ஐக்கிய தேசியக் கட்சி கையகப்படுத்திவிட்டது என்பது அர்த்தமாகும்.

இப்படி நடந்தால் ஞானசார – ஐக்கிய தேசியக்கட்சியின் வார்ப்பு என்று,  ஜனாதிபதியின் தரப்பு நபர்கள் பிரகடனம் செய்து முஸ்லிம்களைக் கையாளும் தமது முயற்சியைத் தொடர்வர்.

“முஸ்லிம்களே, நாம் விழிப்பாக இருக்க வேண்டும்” என்று சொல்வோரைப் பார்த்து நகைத்து,  “மனிதன் தூங்காதிருப்பது சாத்தியமில்லை” என்று கூறுவோரில் கவனமாக இருப்போம். உண்மை போல் தெரியும் பொய்மையை கவனிப்போம்.

இரண்டு பெரிய கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இவ்விரு கட்சிகளுக்கும் தனித்துவத்தின் பெயரில் வாக்குகளைச் சேகரித்து வழங்கும் தனிக் கட்சி முகவர்கள் போன்றோரில் இருந்து கழன்று, முஸ்லிம் மக்கள் தற்காலிகமாகவேனும் சுயாதீனம் பேணுவது இன்றைய அத்தியாவசியத் தேவையாகும்.

கட்சிக் களைவு செய்து சமூகத்துக்குப் போர்வைகளை நெய்வோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்