பாலமுனை வைத்தியசாலை விவகாரம்: பணியாளர்கள் சிலரின் அச்சுறுத்தல் காரணமாகவே, இரவில் கடமை செய்ய முடியவில்லை: டொக்டர் சமூன்

🕔 October 19, 2017

– மப்றூக் –

பாலமுனை வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் உள்ளிட்ட மூன்று பணியாளர்கள், தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், அவர்கள் மீதான அச்சம் காரணமாகவே, இரவு நேர கடமையில் தன்னால் ஈடுபட முடியவில்லை எனவும் பாலமுனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் எம்.ஐ. சமூன், ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

மேலும், கடந்த மாதம் பாலமுனையில் வைத்தியசாலை பணியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்திய பின்னர், சுமூக நிலையினை ஏற்படுத்தும் பொருட்டு,  வைத்தியசாலைத் தரப்பினருடன் அப்பிரதேசத்தவர்கள் சார்பில் இதுவரை பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை என்றும், இதன் காரணமாகவும் இரவு வேளையில் கடமை புரிவதில் சிக்கல்கள் உள்ளன எனவும் டொக்டர் சமூன் மேலும் கூறினார்.

நெஞ்சு வலியினால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை பொதுமகன் ஒருவர் பாலமுனை வைத்தியசாலைக்குக்குக் கொண்டு சென்ற போது, அங்கு வைத்தியர்கள் எவரும் கடமையில் இல்லை எனக் கூறி, திருப்பி அனுப்பப்பட்ட சம்பவமொன்று நேற்றிரவு இடம்பெற்றது.

இச்சம்பவம் குறித்து செய்தியொன்றினை இன்றைய தினம் நாம் வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் சமூனிடம் பேசியபோதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறுகையில்;

“பாலமுனை வைத்திசாலையில் நான்கு வைத்தியர்களின் தேவை உள்ளது. ஆனால், மூன்று பேர்தான் உள்ளோம். இந்த நிலையில் இரவு நேரக் கடமை செய்வது சிரமமானது. ஆயினும், இரவில் கடமையாற்றி வந்தோம்.

இந்த வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் உள்ளிட்ட மூன்று பணியாளர்கள் வைத்தியசாலை நிருவாகத்தினை மேற்கொள்வதற்கு, தொடர்ச்சியாக எனக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் இவர்கள் என்னை தாக்கப் போவதாக அச்சுறுத்தினார்கள். இது குறித்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு அறிவித்ததோடு, பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளேன். ஆனால், குறித்த நபர்களின் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

இதேவேளை, வைத்தியசாலை ஊழியர்கள் சிலருக்கு எதிராக கடந்த மாதம் பாலமுனைப் பிரதேச மக்கள் – மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். அந்த சம்பவத்தின் பிறகு வைத்தியசாலைத் தரப்பினருடன் பேசி சுமூகமானதொரு சூழலை ஏற்படுத்தும் வகையிலான எந்தவிதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. பொதுமக்கள் தரப்பிலிருந்து அது தொடர்பாக யாரும் எங்களுடன் பேசவுமில்லை.

இந்த நிலைமைகள் காரணமாக, இரவு வேளையில் கடமையில் ஈடுபட முடியாதுள்ளது.  கடந்த மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இரவு நேரக் கடமையில் நாங்கள் ஈடுபடுவதில்லை.

வைத்தியசாலையில் கடமையாற்றும் மேற்சொன்ன தாதி உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரினால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள விடயத்தினை, அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்திடமும் முறையிட்டுள்ளேன். எனக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் பிற்பகல் 04 மணிக்கு பின்னர் கடமையாற்றுவதைத் தவிர்க்குமாறு, சங்கத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும், மாலை 06 மணிக்குப் பின்னர் வரையும் நான் கடமையாற்றுகிறேன்” என்றார்.

எது எவ்வாறாயினும், வைத்தியசாலை நிருவாகத்தினருக்குள் நிலைவும் பிரச்சினை காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்தல் அவசியமாகும்.

எனவே, பாலமுனை வைத்தியசாலை விவகாரத்தில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் உடனடிக் கவனமெடுத்து, பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்

தொடர்பான செய்தி: பாலமுனை வைத்தியசாலையில் தொடரும் அலட்சியம்; வைத்தியர் இல்லையென்று, நெஞ்சுவலியுடன் வந்தவரை திருப்பியனுப்பிய கொடூரம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்