பாலமுனை வைத்தியசாலையில் தொடரும் அலட்சியம்; வைத்தியர் இல்லையென்று, நெஞ்சுவலியுடன் வந்தவரை திருப்பியனுப்பிய கொடூரம்

🕔 October 19, 2017

– மப்றூக் –

நெஞ்சு வலியினால் அவதியுற்ற தனது மனைவியை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நபரொருவர், அங்கு வைத்தியர்கள் எவரும்  கடமையில் இல்லாமையினால், பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை பெற முடியாமல் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்ட சம்பவமொன்று நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி. மோகன். இவருடைய மனைவி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை இரவு மோகனின் மனைவிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தனது மோட்டார் சைக்கிளில் மனைவியை ஏற்றிக் கொண்டு, அருகிலுள்ள பாலமுனை வைத்தியைசாலைக்கு மோகன் விரைந்துள்ளார். ஆயினும், அங்கு வைத்தியர்கள் எவரும் கடமையில் இருக்காமையினால், நெடு நேரம் காத்திருந்த மோகன், தனது மனைவிக்கு சிகிச்சை பெறாமலேயே வீடு திரும்பியதாகக் கூறுகின்றார்.

இது குறித்து மோகன் மேலும் தெரிவிக்கையில்;

“நேற்று இரவு 11.30 மணியிருக்கு இச்சம்பவம் நடந்தது. வைத்தியசாலைக்குச் சென்ற போது அங்கு எவரையும் காண முடியவில்லை. சத்தமிட்டுக் கத்தினேன். நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒருவர் வந்தார். எனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைச் சொன்னேன். வைத்தியர்கள் எவருமில்லை என்று அவர் கூறினார்.

அந்த நிலைவரம் எனக்கு மன உளைச்சாலை ஏற்படுத்தியது. சத்தமிட்டு நீண்ட நேரம் அழுதேன். வைத்தியர்கள் எவருமில்லாத இந்த வைத்தியசாலையை தீயிட்டு எரிக்கவா என்று ஆத்திரத்தமாகக் கத்தினேன். வைத்தியர் இல்லை என்றால் இங்கிருந்து போய்விடவா என்று கேட்டேன். சரி போய் விடுங்கள் என்றார்.

இந்த நிலையில் எனது மைத்துனர் அங்கு வந்தார். எனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று சுடுநீர் கொடுத்தோம், எங்களால் முடிந்ததை செய்து உறங்க வைத்தோம்” என்றார்.

நெஞ்சு வலி ஏற்பட்ட பெண்ணின் கணவரான கே.பி. மோகன் – ஓர் ஏழைக் கூலித் தொழிலாளி. திராய்கேணிப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளை வாங்கி, அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், வீதியோரமாக வைத்து நாளாந்தம் விற்பனை செய்து வருகின்றார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் அவரின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

இலவச சுகாதாரத்துக்காக அரசாங்கம் கோடிக்கணக்கில் நிதியொதுக்கீடு செய்தும்,  மோகன் போன்ற ஏழைகளுக்கு, தக்க தருணத்தில் இலவச சுகாதார வசதியினைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பது விசனத்துக்குரிய விடயமாகும்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலமுனை வைத்தியசாலையில் இது போன்ற அலட்சியமான செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வைத்தியசாலையில் நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை வழங்கக் கூடிய, உள்ளக நோயார் பிரிவு, வாட் வசதிகள் உள்ளன. மேலும், இங்கு பல வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருந்த போதும், தக்க தருணத்தில்  மக்களுக்கு இங்கு சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.

அண்மையில், பாலமுனையைச் சேர்ந்த ஒருவர், இரவு நேரத்தில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த போதுகூட அங்கு வைத்தியர்கள் இருக்கவில்லை. மேலும், அங்கிருந்த தாதி உத்தியோகத்தர் ஒருவர் முறைகேடாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள், பாலமுனை வைத்தியசாலையை மூடி, பாரிய மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டமையும் நினைவு கொள்ளத்தக்கது.

நேற்றிரவு நெஞ்சு வலியுடன் பாலமுனை வைத்தியசாலைக்குச் சென்று, வைத்தியர்கள் இல்லாமையால் சிகிச்சையின்றி வீடு திரும்பிய மோகனின் மனைவிக்கு, துயரமான நிலைவரம் ஏதாவது ஏற்பட்டிருந்தால் அதற்கு யார் பொறுப்புக் கூறுவது?

பாலமுனை வைத்தியசாலை தொடர்பில் தொடர்ந்தும் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்சியாக வந்து கொண்டிருக்கின்ற போதும், கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் இது குறித்து கடுமையான நடவடிக்கைகள் எவற்றினையும் ஏன் எடுக்காமல் இருக்கின்றார்?

பாலமுனை வைத்தியசாலையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில்தான் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய வீடு இருக்கின்ற போதும், இந்த வைத்தியசாலை விவகாரத்தில் ஏன் அவர் கண்டும் காணாத போக்கினைக் கடைப்பிடித்து வருகின்றார்?

இவ்வாறான கேள்விகள் ஏராளமுள்ளன. விடைகள்தான் எதுவுமில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்