தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை: எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவிப்பு

🕔 October 12, 2017

நேர்கண்டவர்: சுஐப் எம். காசிம்

(இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் 05/ 07/ 1998ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியை காலத்தின் தேவை கருதி இங்கு தருகின்றோம்)

கேள்வி: அரசின் தீர்வுப்பொதியில் கூறப்பட்டுள்ள தென்கிழக்கு அலகு யோசனைக்கு அண்மைக்காலமாக எதிர்க்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றனவே இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனது வீட்டு வாசற்கதவுகளையும் தட்டி அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு கடந்த காலங்களில் பல தடவை தீர்வு முயற்சிகள் மூலம் முடிவுகட்ட முனைப்புகள் காட்டப்பட்டு வந்துள்ளன. இவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமைதியை விரும்பாத அல்லது அனைத்து சமூகங்களும் சமத்துவமாக தன்னைத்தானே ஆளுகின்ற உரிமையை அங்கீகரிக்க விரும்பாத மூன்று சமூகங்களிலும் உள்ள பேரினவாத சக்திகள், தீர்வு முயற்சிகளை குழப்பியே வந்துள்ளன. இவ்வாறு குழப்புவதற்கு பேரினவாதிகள் அப்பாவிப் பொதுமக்களில் சிலரையே பகடைக் காய்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆரம்ப காலங்களில் கொண்டுவரப்பட்ட தீர்வு முயற்சிகள் முரட்டுத்தனமாக சிங்களப் பேரினவாதிகளின் அச்சுறுத்தலால் கிழித்து வீசப்பட்டன. தமிழர் தரப்பும் பேசி சுமுகமான நிலைக்கு வாருங்கள் என்ற மழுப்பல் நிலைப்பாடுகளை எடுத்தது. ராஜதந்திர ரீதியாக வளர்ச்சி கண்டிருந்த பேரினவாதம் இடைக்காலத்தில் முனைப்புப் பெற்று, தீர்வு முயற்சிகளை பாதிக்கப்பட்ட இரு தரப்புக்களினதும் தலையில் போட்டு உடைத்தது.

தற்பொழுது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பொதி மூலமான தீர்வு முயற்சியை, இனப்பிரச்சினையில் மூன்றாம் தரப்பாக சம்பந்தப்பட்டுள்ள – மிகப் பலவீனமான வீச்சங்களைக் கொண்ட முஸ்லிம் மக்களை, தங்களுக்குள் முடிவுக்கு வர முடியாதளவுக்கு மோதவிட்டு குழப்பியடிக்க அதே பேரினவாதம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கான துருப்புச் சீட்டாக தென்கிழக்கு அலகை இவர்கள் தெரிவு செய்ததில் வியப்பேதுமில்லை.

ஏனெனில் பிரதேசவாதத்தை தூண்டி விடுவதன் மூலம் மட்டுமே முஸ்லிம்களை அவர்களுக்குள்ளே மோதவிட முடியும் என்பதை, நவீன வளர்ச்சி கண்டுள்ள பேரினவாதம் அறியாமலா இருக்கும்?  ஒட்டுமொத்தமாக பார்க்குமிடத்து தென்கிழக்குக்கு எதிரான குரல்களின் முக்கிய நோக்கம் தீர்வுப் பொதியை தீர்த்துக் கட்டுவதே அன்றி, தென்கிழக்கை கிள்ளியெறிவதல்ல என்பது நன்கு புலனாகும். இதுதான் பேரினவாதிகள் இன்று கொய்ய நினைக்கின்ற முதல் வெற்றிக் கனியாகும்.

இத்தனைக்கும் தென்கிழக்கு அலகு – பேச்சுவார்த்தை மேசைக்கு வரவிருக்கின்ற ஆலோசனைகளில் உள்ள ஒரு நகலே தவிர, நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஆயத்தமாகவிருக்கின்ற இறுதி வடிவின் அசல் அல்ல. எனவே, “தீர்வுப் பொதி சீரழிந்ததும், இந்நாட்டில் அமைதி திரும்பும் சந்தர்ப்பம் இல்லாமல் போனதும் முஸ்லிம்களினால்தான்என்கின்ற வரலாற்றுப் பழி, எமது சமூகத்தின் மீது விழுந்துவிடாதிருக்க முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அவதானமாக இருப்பது அவசியமாகும்.

கேள்வி : அம்பாறை கரையோர தேர்தல் தொகுதிகள் மூன்றினையும் மாத்திரம் உள்ளடக்கி ஆலோசிக்கப்படுகின்ற, முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தென்கிழக்கு அலகை நிராகரிக்குமாறு மக்களைக் கோரியும், கைவிடுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையைக் கோரியும், மட்டக்களப்பில் தொடராக நடைபெற்ற பிரசுர வெளியீடுகள், ஹர்த்தால், கருத்தரங்குகள் எல்லாம் முஸ்லிம்களைப் பிராந்திய ரீதியாகப் பிரித்து பலவீனமாக்கி விடும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இது மாத்திரமல்ல, ஊர்ஊராக முஸ்லிம்களை சிங்கள, தமிழ் தலைமைகளிடம் சரணடையும் சாத்தியத்தையும் உண்டாக்கியுள்ளன. இது சம்பந்தமாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்களுக்குள் பாரிய அளவில் ஏற்படுகின்ற ஒற்றுமை ஒன்றுதான் முஸ்லிம்களின் அரசியல் பலத்தின் அடிப்படையாகும். விசேடமாக, வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினையின் ஆதிமூலக் குகைக்குள் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களின் ஒருமித்த குரல்தான் எமது அரசியல் விடுதலையின் அடிநாதமாகும்.

இவ்வாறே வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் மக்களுடனும் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் மக்களுடனும் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமையை இறுக்கமாக வளர்த்தெடுப்பது முஸ்லிம்களின் அவசியக் கடமையாகும். ஆனால் இவ்வொற்றுமையானது எவ்வகையிலும் பெரும்பான்மைக்கு தலைவணங்குகின்ற போக்காகவோ, அரசியல் அதிகாரத்துக்கும், ஆயுத அதிகாரத்திற்கும் சரணடைகின்ற வெளிப்பாடுகளாகவோ இருக்க அனுமதிக்க முடியாது.

தலைவணங்குவதும், சரணடைவதும் எந்த வகையிலும் சமத்துவமான இன, சமூக ஐக்கியத்துக்கு வழிகாட்டப் போவதில்லை. முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்கு வித்திடப் போவதுமில்லை. எனவே, முஸ்லிம்கள் எப்பிரதேசத்தில் வாழ்ந்தாலும் அவர்களது சுய கௌரவமும், தன்மானமும், சுய நிர்ணய உரிமைக்கான விடுதலையும் பிரதேச வேறுபாடு கடந்த ஒற்றுமையில்தான் தங்கியுள்ளது. இவ்வொற்றுமையை கட்டியெழுப்புவதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் உழைத்து வருகின்றது.

எமது கட்சியின் இம்முயற்சியை தடுத்து முஸ்லிம்களை பிரதேச ரீதியாக பிரித்து வைப்பதிலும், தலைவணங்கிகளாக்குவதிலும் சரணடைய வைப்பதிலும் வெற்றி காண்பதே பேரினவாதம் பறிக்கின்ற இரண்டாவது வெற்றிக் கனியாகும். இதற்காகவே நவீன பேரினவாதம் தென்கிழக்கு அலகு ஆலோசனையை கல்லாகப் பாவிக்க முயல்கிறது.

முஸ்லிம்களுக்கான தனி அரசியல் கட்சியின் தோற்றத்தின் பின்பு, கடந்த ஒன்றரை தசாப்த காலமாக வளர்ந்து வந்துள்ள முஸ்லிம்களது அரசியல் ஸ்திரத்தன்மையையும், முஸ்லிம் தேசியத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்து விடுவதற்கு எடுக்கப்படும் எந்தவித முயற்சிக்கும் எப்பிரதேச முஸ்லிம் இயக்கங்களும் தனிப்படட அரசியல்வாதிகளும் பலியாகிவிடக் கூடாது என்பது எனது உறுதியான வேண்டுதலாகும்.

இன்று இந்நாட்டில் இருக்கின்ற கொம்புகள் முளைத்த நவீன பேரினவாதிகள் தாங்கள் நினைத்த காரியங்களை சாதிப்பதற்காக நச்சுக் கருத்துக்களை முன்னைய காலங்களைப்போல் நேரடியாக பரப்புவதோ, நேரடியாக சம்பந்தப்படுவதோ இல்லை. மாறாக மக்களின் பலவீனங்களை நன்கு அறிந்த பின்னர், மதிக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட நச்சு விதைகளை அவர்களது ஏவலாளர்கள் மூலமாக காற்றில் பரப்பி விடுகின்றார்கள். மிதக்கும் இந்த நச்சு விதைகள், கூர் உணர்திறனுடன் இருக்கின்ற படித்த இளைஞர்கள் சிலரின் மூளைக்குழிக்குள் விழுந்து முளைவிடுகின்றன.

இதில் இவ்விளைஞர்கள் குற்றவாளிகள் அல்லர். இலகுவில் இனங்காணும் திறனுடைய இவர்கள் முளைவிட்ட செடிகளை பிடுங்கி எறிந்து விடுவார்கள். ஆனால் சுயநலம் நிறைந்த குறுநிலப் பிரதேச அரசியல்வாதிகள் தங்களது மன நிலங்களை நன்கு பயன்படுத்தி நச்சு விதைகளுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களே ஆபத்தானவர்களாவர். இவர்களை மக்கள் இனங்கண்டு விலக்கி வைக்க வேண்டும். மேற்சொன்ன நவீன பேரினவாதிகளால் கண்டுபிடிக்கப்பட்ட, மிதக்கும் தன்மையுடைய நச்சுவிதைதான் தென்கிழக்கு அலகுக்கான எதிர்க்குரலாகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

கேள்வி: தென்கிழக்கு அலகை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டுகோல்களாக இருப்பவர்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில் : இந்த நடவடிக்கையாளர்கள் தீர்வுப்பொதியின் அடிப்படையையே விளங்கிக் கொள்ளவில்லை என்பதுதான் எனது கருத்தாகும். இவர்கள் தென்கிழக்கு அலகினை கைவிடுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையைக் கோருவது நகைப்புக்கிடமானது. முஸ்லிம் காங்கிரஸ் எந்த வகையிலும் சம்பந்தப்படாத தீர்வுப் பொதியில் கூறப்பட்டுள்ள ஒரு விடயத்தைக் கைவிடுமாறு, அதன் தலைமையைக் கோருவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?

எமது கையில் இல்லாத ஒன்றை நாம் எவ்வாறு கை விட முடியும்? எனவே இவர்கள் முதுகெலும்பு உள்ளவர்களாக இருந்தால், அரசாங்கத்துக்கு எதிராகவே அவர்களின் எதிர்க்குரல்கள் இருந்திருக்க வேண்டும். இவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம்களின் நலன் சார்ந்து எந்த விதமான சனநாயக நடவடிக்கைகளிலும் செயற்படும் வக்கற்றவர்கள் என்பது தெரிந்ததே. இவர்களது நோக்கம் முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைக்கின்ற அரசியல் நலன்களை இல்லாமல் செய்வது மட்டுமே ஆகும்.

தென்கிழக்கை எதிர்க்கின்ற இவர்கள் என்ன மாற்று யோசனைகளை வைத்திருக்கின்றார்கள் என்று ஒருபோதும் கூறவில்லை. தென்கிழக்கு அலகு இல்லாவிட்டால் நிபந்தனையற்ற வடகிழக்கு இணைப்பை ஆதரிக்கின்றார்களா? அல்லது வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதை ஆதரிக்கின்றார்களா? என்பதை இவர்கள் திறந்து சொல்ல வேண்டும். இணைப்பைப் பற்றியோ அல்லது பிரிப்பைப் பற்றியோ இவர்கள் ஒருபோதும் கருத்துக்களை வெளியிடமாட்டார்கள்.

இவ்விரண்டு கருத்துக்கும் எதிராக பலமான இரண்டு சக்திகள் இருக்கின்றனஆயுதப் படை, இணைப்புக்கு எதிரானது என்று இவர்கள் கருதுகின்றார்கள். அவ்வாறே பிரிப்புக்கு வன்மையான எதிராளிகளாக புலிகள் உள்ளார்கள் என்பதையும் அறிவார்கள். இவ்விரு சக்திகளையும் எதிர்த்து தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் திராணி இவர்களுக்குக் கிடையாது.

மிக அண்மையில் முன்மொழியப்பட்டிருக்கின்ற, இலங்கைக்குள்ளே அமைந்துள்ள தென்கிழக்கு அலகு பற்றி அலட்டிக்கொண்டு எதிர்க்கூட்டங்கள் கூடுகின்றவர்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கின்றவர்கள், புத்தகம் வெளியிடுகின்றவர்கள் முஸ்லிம் மக்களின் அவசியமான அரசியல் நலன்களில் அக்கறையற்றிருந்தனர்.

இருபது வருடங்களுக்கு மேலாக தனித் தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஆயுதப் போர் நடைபெற்று வருகிறது. இந்தத் தமிழீழத்தில் முஸ்லிம்களின் நிலை பற்றி இதுவரை ஆய்வுகூடங்கள் போடவும் இல்லை. தமிழீழத்துக்குள் முஸ்லிம்களுக்கு தனி அரசியல் அதிகாரம் கேட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கவும் இல்லை. முஸ்லிம்களுக்குத் தாங்க முடியாத இன்னல்கள் ஏற்பட்டிருந்த பொழுதிலும் தமிழீழத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை. காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி, மூதூர்,கிண்ணியா, தம்பலகாமம், தோப்பூர், குச்சவெளி, முசலி மற்றும் எருக்கலம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் புலிக்கூட்டத்தின் மத்தியில் தனித்து விடப்பட்ட செம்மறி ஆடுகளாக மாற்றப்படுவர் என்று குறிப்பிட்டு புத்தகம் எழுதியிருக்கவுமில்லை.  

வடக்கு கிழக்கில் அனைத்து ஆயுதக் குழுக்களும் முஸ்லிம் பகுதிகளில் அராஜகம் புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான், முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிதம் அடைந்தது. முஸ்லிம்களின் பாதுகாப்பு அவசியம் பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பகிரங்கமாக முழங்கியது. வடக்கு கிழக்கின் எந்தெந்த மூலை முடுக்குகளிலெல்லாம் முஸ்லிம்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார்களோ அங்கெல்லாம் அவர்களது கண்ணீர் துடைக்கவும், தைரியமூட்டவும் தலைமைக்கு விஷேடமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தும் கூட, உயிரையும் துச்சமாக மதித்து ஓடிச்சென்று செயல்பட்ட வரலாறு கண்முன்னே விரிந்து கிடக்கிறது.

முஸ்லிம்கள் கேட்பாரற்ற அநாதைகளாக விடப்பட்டிருந்த வேளைகளிலெல்லாம் மௌனிகளாக மூலைகளில் முடங்கி இருந்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட சக்திகளுக்கு தலைதாழ்த்தி சேவகம் செய்பவர்களுக்கும் இப்போது தென்கிழக்கு பற்றி – வாய் திறந்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது.

தமிழீழ கோரிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்து 1977  ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குதித்தது. அவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைதான் முஸ்லிம் ஐக்கிய முன்னணி அமைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் முஸ்லிம்கள் சார்பாகப் பேசி அவர்களுடைய 1977ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திலே முஸ்லிம்களது அரசியல் தேவைகளையும், விருப்பங்களையும் சேர்த்துக்கொள்ள  வைத்தது என்கின்ற வரலாற்று நிகழ்வையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

கேள்வி: அம்பாறையில் சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் 03 தொகுதிகளை மட்டும் கொண்டதாக அமையும் தென்கிழக்கு அலகினை ஏற்றுக்கொள்ளும் நிலை வருமானால், ஏனைய பகுதி முஸ்லிம்களுக்கு என்ன நியாயம் கூறுவீர்கள்?

பதில்: நான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற வகையிலும், தனிமனித அபிப்ராயத்தைக் கொண்டிருக்கும்  இலங்கையன் என்ற ரீதியிலும் பிரதேச நோக்குக்கு அப்பாற்பட்ட மனோநிலையில் உள்ளவன். நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம் மக்களது அரசியல் பலத்தினை அதிகரிப்பதும் அதன்மூலம் முஸ்லிம்களின் விடிவை நோக்கி உழைப்பதும்தான் எனது மூச்சு.

அம்பாறை தவிர்ந்த மட்டக்களப்பு, திருமலை மற்றுமு் வன்னி ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல, அகில இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கும் ஆணித்தரமாக நான் கூற விரும்புவது என்னவென்றால்; தீர்வுப் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ள தென்கிழக்கு அலகு என்பது தென்கிழக்கு வெளியில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் சூழ்நிலைகளையோ, சமூகப் பாதுகாப்புக்கு குந்தகத்தையோ ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டால், உத்தேச தென்கிழக்கு அலகினை நிராகரித்து தூக்கி வீசுவதற்கும் நான் தயங்கமாட்டேன்.

ஆனால் அண்மைக்காலமாக சிலரிடமிருந்து கிளம்பியிருக்கின்ற எதிர்ப்புக் குரல்களுக்கு உண்மை என்னும் வல்லமை கிடையாது என்றே நான் நம்புகின்றேன். இவ்வாறுதான் நாங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கென்று ஒரு தனிக்கட்சியின் அவசியம் பற்றி கணிப்பிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்த காலகட்டத்திலும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின.

தனிக்கட்சி முஸ்லிம்களை அழித்துவிடும் என்று கூக்குரலிட்டனர். இன்று தென்கிழக்கு அலகுக்கு எதிராக என்ன என்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ, அதே விதமான அத்தனை காரணங்களும்தான் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தின் போது முன்வைக்கப்பட்டன. ஆனால், இன்று முஸ்லிம் காங்கிரஸின் வரவினால் இந்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் பலமும், அந்தஸ்தும் அதிகரிக்கவில்லையா?

கேள்வி: அரசின் தென்கிழக்கு யோசனை பற்றி தங்களது தத்துவார்த்த பார்வையில் விளக்குங்களேன்?

பதில்: இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று தவிர்க்க முடியாது. அதிகாரம் மூன்று சமூகங்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுகின்ற போதுதான் அர்த்தமுள்ள அமைதியையும், சமாதானத்தையும் தோற்றுவிக்க முடியும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் மாத்திரமல்ல ஒரே சமூகத்துக்குள் இருக்கின்ற பல்வேறு தொகுதி மக்களுக்கும் தீர்வு சார்ந்த மயக்கங்களும், நியாயமான சந்தேகங்களும் ஏற்படுவது இயல்பானதே.

வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் கிழக்கு மாகாண தமிழர்கள் சிலருக்கு நியாயமான சந்தேகங்கள் எழுந்தன. இதேபோல் உத்தேச தென்கிழக்குஅலகு பற்றி ஆலோசனை வெளியான பின்னர், பிரதானமாக மட்டக்களப்பு, திருமலை மற்றும் வன்னி மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. முஸ்லிம்களது சந்தேகங்களை களைவதற்கும்,  சூழ்நிலைகளை கையாளுவதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆயத்தமாகவே இருக்கின்றது.

ஆனால், நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல் – மக்கள் மத்தியில் இவ்வாறான பலவீனமான சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்ற போது, அதனைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தினுடைய உரிமைக்கு வேட்டு வைக்க வருகின்ற கூட்டத்தினரிடம் அச்சமூகம் அவதானமாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். கடந்த ஐந்து தசாப்த காலங்களாக, அதாவது பண்டா செல்வா ஒப்பந்தம் முதற்கொண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் வரை, முஸ்லிம்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது என்றோ, அவர்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்க்கப்படல் வேண்டும் என்றோ, அதற்கான  நிர்ணயம் செய்யப்பட்ட எல்லைகளைக் கொண்டதொரு பிராந்திய அலகு பற்றியோ சிந்திக்கப்படவில்லை.

தற்போது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் முன்வைக்கின்ற ஆலோசனைகளில் எல்லைகள் சூட்டப்பட்ட ஒரு பிராந்திய அலகு பற்றி தெரிவிக்கப்படுகிறது. இது ஐம்பது வருட காலமாக கவனிக்கப்படாமல் கிடந்த முஸ்லிம் சமூகத்துக்கு – தனி அரசியல் கட்சி தோற்றம் பெற்று பத்து வருட காலத்துக்குள் கிடைத்த மாபெரும் வெற்றியும், அங்கீகாரமும் ஆகும். இதுதான் இன்றைய தீர்வுப்பொதியில் பொதிந்துள்ள முஸ்லிம்களுக்கு சாதகமான விடயமே தவிர, இதற்கு மேல் வேறு எதனையும் நாம் தலையில் போட்டுக் குழப்பிக்கொண்டு பலியாகி விடக் கூடாது.

முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை, கோட்பாடு மற்றும் லட்சியம் என்பவற்றைக் கொண்டு இயங்குகின்ற ஒரு கருத்தியல் ரீதியான கட்சியாகும். கொள்கைகள் என்றும் மாறாது. கோட்பாடுகளும் நிலையான தன்மையைக் கொண்டன. லட்சியம் எய்தப்படும் வரை தொடர்வது. ஆனால் ஒரு சமூகத்தின் அரசியல் போராட்டத்தில் உபாயங்கள் களப்பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியது.

ஐம்பது வருடகால போராட்டப் பாரம்பரியம் கொண்ட தமிழர்களது கோரிக்கைகள் 50க்கு 50 தொடக்கம் மாறிவந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பரிமாணங்களையும் அடைந்து, தமிழீழம் என்ற தனி நாட்டுக் கோரிக்கையாக உருவெடுத்தது. தற்போது இணைந்த வடக்கு கிழக்கு அதிகார அலகு என்ற வகையில் சமரசம் காணும் அக்கறைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தீர்வு ஆலோசனைகளில் கூறப்பட்டிருக்கின்ற தென்கிழக்கு அலகை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை. முஸ்லிம் காங்கரஸுடைய எந்த ஆவணங்களிலோ, கட்சியின் பத்திரிகை அறிக்கைகளிலோ அரசாங்கத்தின் ஆலோசனைகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் தென்கிழக்கு என்ற திசைவழிப் பெயர் பற்றி எவரும் கண்டிருக்க முடியாது.

1995 ஆம் ஆண்டு வரை, நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் பற்றித்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேசி வந்தது. தீர்வுப்பொதி முன்வைக்கப்பட்ட பின்னர் தோற்றம் பெற்றுள்ள புதிய சூழ்நிலைகளில் நிலத் தொடர்புடைய முஸ்லிம் பெரும்பான்மை பிராந்திய அலகு ஆலோசனை ‘தென்கிழக்கு’ என்றும், நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியங்களைச் சேர்த்து ‘அகண்ட தென்கிழக்கு’ என்றும் ஈரிணைக் கோட்பாடாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

தென்கிழக்கு எனும் தனிக்கோட்பாட்டுக்கும் அகண்ட தென்கிழக்கு என்ற தனிக் கோட்பாட்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் புரிந்துகொள்ளப்படுதல் வேண்டும். மேற்சொன்ன ஈரிணைக் கோட்பாடுகள் பற்றி, காலம் கனிந்து வருகின்ற போது, கட்சி பகிரங்கப்படுத்தும். அது அனைத்து முஸ்லிம் மக்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கும்.

கேள்வி: பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் முன்வைக்கப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட யோசனைகள், கோரிக்கைகள் பற்றி கூறுங்கள்?

பதில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்பொழுதுமே வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களை உள்ளடக்கிய முஸ்லிம் பெரும்பான்மை தனியலகினை கோரி வந்துள்ளமை ஆவணங்களின் மூலம் நிரூபணம் ஆகும். எமது கட்சி இறுதியாக முன்வைத்த யோசனைகளில் ஆவணப்படுத்தப்பட்ட பின்வரும் விடயங்கள் இதனைத் தெளிவுபடுத்தும்.

அதிகாரப் பரவலாக்கல் பற்றிக் குறிப்பிடும் போது, எமது பிரேரணைகள் மிகத்தெளிவாக பின்வருமாறு அமைகின்றன.

(அ)  அதிகாரப் பரவலாக்கல் அலகு என்பது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, அங்கு வாழும் வேறுபட்ட இன மக்களின் உரிமைகளைப் பேணுவதாக அமைதல் வேண்டும்.

(ஆ) தமிழ் மக்கள் வதியும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கென ஒரு பிரத்தியேகமான அலகு அவர்கள் குடியிருக்கும் மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வுவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற இடங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படுதல் வேண்டும்.

(இ) அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய  தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு மட்டக்களப்பு, திருமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை உள்ளடக்கி நிலத்தொடர்பற்ற, அடையாளப்படுத்தப்பட்ட முஸ்லிம் அலகு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.

கேள்வி: இணைப்பு  (1) எவ்வாறு அமைந்துள்ளது என்று விளக்குவீர்களா? (சந்திரிகா அரசாங்கத்தில் அப்போது தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பிலுள்ள இணைப்பு குறித்து, ஊடகவியலாளர் கேட்கிறார்)

பதில்: இணைப்பு (1) இல் கோரப்பட்டுள்ள தெளிவான விடயங்களும் பின்வருமாறு அமைகின்றன.

  • தற்போதைய அம்பாரை மாவட்டத்தில்

முன்னைய நான்கு பிரிவு வருமான அதிகாரிகள் பகுதியாக பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, கரைவாகுப்பற்று, நிந்தவூர்பற்று ஆகிய பிரிவுகளையும் வேகம்பற்று தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் (கல்லோயா ஆற்றுக்கு தெற்கு) உள்ளடக்கியதாக ஒரு தனியான முஸ்லிம் பெரும்பான்மை நிருவாக மாவட்டம் உருவாக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 920 சதுர மைல்களாகும்.

மேலே (1) இல் சொல்லப்பட்ட புதிய நிருவாக மாவட்டத்தில் இன ரீதியான பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படல் வேண்டும். விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள், இனங்களின் குடிசனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் கிடைக்கக்கூடியவாறு உருவாக்கப்படல் வேண்டும்.

  • மட்டக்களப்பு மாவட்டத்தில்

24 வீதம் முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள் என்பன இன விகிதாசாரப் படி பங்கிடத்தக்கதாக முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் என்பன உருவாக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 346 சதுர மைல்களாகும்.

  • திருமலை மாவட்டத்தில்

29 வீதம் முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட திருமலை மாவட்டத்தில் மூதூர்,கிண்ணியா, தம்பலகாமம், தோப்பூர், குச்சவெளி பகுதிகளில் விவசாயக் காணிகள் இயற்கை வளங்கள் என்பன இன விகிதாசாரப்படி பங்கிடப்படும் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகள் உருவாக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 414 சதுர மைல்களாகும்.

  • மன்னார் மாவட்டத்தில்

27 வீதம் முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி, முசலிப் பகுதிகளிலும் விவசாயக் காணிகள், இயற்கை வளங்கள் இன விகிதாசாரப்படி பங்கிடப்படும். முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படல் வேண்டும். இதன் பரப்பளவு 278 சதுர மைல்களாகும்.

  • பிரதேச சபைகள்,பிரதேச செயலகப் பிரிவுகளில் மீதமாகவுள்ள கல்முனை, சம்மாந்துறை, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் முஸ்லிம் பெரும்பான்மை குறையாதவாறு நகர சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.
  • பிரதேச சபைகள், பிரதேச செயலகப் பிரிவுகளோடு மட்டக்களப்பு, திருகோணமலை. மன்னார், மாவட்டங்களில் நெருங்கிய தொடர்புடையதாக தனியான முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நிருவாக மாவட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

கேள்வி: அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமர்ப்பித்த தெரிவுக்குழு அறிக்கைக்கான மாற்றுரை ஒன்று, தங்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ளது. அது பற்றிக் கூறுங்கள்.

பதில்: அமைச்சர் பீரிஸ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தெரிவுக்குழு அறிக்கை சம்பந்தமாக கட்சிக்கிருந்த சந்தேகங்களுக்கு விடை காணும் வகையிலான திருத்தங்கள் சிலவே காணப்படுகின்றன. அவை சர்வஜன வாக்கெடுப்பு பற்றிய மயக்கங்களை தெளிவாக்குவனவாக காணப்படுகின்றன.

அத்தோடு சகல சபையினதும் அமைப்பு வடிவச் சமநிலை பேணப்படுவதன் அவசியம் பற்றியும் இனப்பரம்பல் விதி வசத்தால் சகல சபைகளிலும் சிறுபான்மையினராக வாழ நேருகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களது உரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்கள் பற்றியும் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிறுபான்மைக் கட்சி என்ற வகையில் எமது கடமையை இம்மாற்றுரையில் சரியாகச் செய்துள்ளோம் என்றே கருதுகின்றேன்.                                                                                                 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்