துமிந்த ‘டூப்’ விடுகிறார்: நிரூபிக்கத் தயார் என்கிறார் ஹிருணிகா

🕔 October 12, 2017

ரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எந்தவித நோயும் இல்லை என்றும், நடுநிலையான வைத்தியர் குழுவொன்றின் மூலம் இதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சிறையிலடைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா நோய்வாய் பட்டுள்ளதாகவும், அவருடைய மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதற்காக அவர் சிகிச்சை பெற வேண்டுமெனவும் சிபாரிசு செய்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஹிருணிகா இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா, எந்தவொரு நோயினாலும் வருந்தவில்லை.

துமிந்தவுக்கு எந்த நோயுமில்லை. அவர் எந்தவொரு நோயாலும் துன்புறவுமில்லை. ஒரு வைத்தியர் குழுவினைக் கொண்டு இதனை நான் நிரூபிப்பேன்.

அவரை கண் வைத்தியசாலைக்கு, தள்ளு வண்டியில் வைத்துக் கொண்டு சென்றதை நான் பார்த்தேன். அவருடைய வயிற்றிலோ, காலிலோ அவர் கூறுகின்றமை போல் எந்த நோயுமில்லை.

ஓர் அனுமதியின் பேரில் வைத்தியர் குழுவொன்றினைக் கொண்டு, துமிந்த சில்வாவை மருத்துவ சோதனைக்குட்படுத்தி, அவருக்கு எந்த நோயுமில்லை என்பதை நிரூபிக்க முடியும்.

இதனைச் செய்வதற்கு சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே, நடுநிலையான வைத்தியர் குழுவொன்று உள்ளது” என்றார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்