வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம்

🕔 October 7, 2017

– அஹமட் –

டக்குடன் கிழக்கு இணைக்கப்படுமானால், முஸ்லிம்களுக்கு தனியான அலகு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில், அவ்வாறான தனி அலகுக்கான முன்மொழிவினை ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட  உயர்பீட உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

‘வடக்குடன் கிழக்கு இணைய வேண்டும் என்கிற தமிழ் தரப்பின் கோரிக்கையை, எடுத்தவுடன் தட்டிக்கழித்து விட முடியாது’ என்று கூறியமையின் மூலம், வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள மு.கா. தலைவர்; அவ்வாறான இணைப்பின் போது – முஸ்லிம்களுக்கான தனி அலகு ஒன்று வழங்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

இவ்வறானதொரு நிலையிலேயே, குறித்த உயர்பீட உறுப்பினர் மேற்கண்ட கேள்வியினை எழுப்பியுள்ளார்.

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வெளியிட்டுவரும் கருத்துக்கள் தொடர்பில், குறித்த உயர்பீட உறுப்பினரிடம் கேட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

தன்னுடைய அடையாளத்தை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அந்த உயர்பீட உறுப்பினர், இது தொடர்பாக பல்வேறு விடயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முஸ்லிம்களின் மிகச் சிறிய அதிகாரத் தேவையான கரையோர மாவட்டக் கோரிக்கையினையே, இடைக்கால அறிக்கைக்கு – ஒரு முன்மொழிவாக வழங்க முடியாத முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முஸ்லிம்களுக்கான தனியலகு பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரசின் அந்த உயர்பீட உறுப்பினர் விசனம் வெளியிட்டார்.

மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் அபிலாசையான கரையோர மாவட்டத்தை, முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவர், கட்சியின் பேராளர் மாநாட்டுத் தீர்மானங்களிலிருந்து அகற்றியதோடு, தேசிய மாநாட்டு தீர்மானங்களில் இருந்தும் அகற்றியிருந்தமையினையும், முஸ்லிம் மக்கள் நினைவு கொள்ள வேண்டுமெனவும், அவர் கேட்டுக் கொண்டார்.

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதை கிழக்கு முஸ்லிம்கள் தமது உணர்வு மற்றும் உரிமையோடு சம்பந்தப்பட்ட விடயமாகவே பார்க்கின்றனர். ஆனால், ரஊப் ஹக்கீம் அதனை -கொழுத்ததொரு வியாபாரமாகவே பார்ப்பதாகவும் அந்த உயர்பீட உறுப்பினர் விபரித்தார்.

எனவே, வடக்குடன் கிழக்கை இணைப்பதற்குரிய மு.கா. தலைவரின் யோசனையை, முஸ்லிம் மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமெனவும், அந்த உயர்பீட உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்