ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்

🕔 October 6, 2017

விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், பாலியல் தொழிலாளர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் போது, உபயோகிக்கப்பட்ட ஆணுறைகளை சான்றுப் பொருளாக நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை என, நாட்டிலுள்ள பொலிஸார் அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றில் ஆஜர் செய்யும் போது, ஆணுகளை சான்றுப் பொருளாகச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விபச்சாரக் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் பெண்களை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் செய்யும் போது, கூடவே ஆணுகளையும் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக, அண்மையில் கிடைத்த அறிக்கையொன்றினை அடுத்து, இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆணுறைகளைப் பயன்படுத்துவது மருத்துவ ரீதியாக பாதுகாப்பானது என்பதால், அதனை நீதிமன்றில் ஒரு சான்றுப் பொருளாகச் சமர்ப்பிப்பது மனித உரிமை மீறலாகும் என, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் ஊடகமொன்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாலியல் நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக ஆணுறைகளைப் பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சும் அனுமதி வழங்கியுள்ளமையினால், ஆணுறையை ஒருவர் தன்வசம் வைத்திருக்கின்றமை ஒரு குற்றமாகாது என்றும், மேற்படி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னொருபுறம் , உபயோகிக்கப்பட்ட ஆணுறைகளை நீதிமன்றில் சான்றுப் பொருளாக சமர்பிக்கும் போது, பாலியல் நோய்த் தொற்றுக்கள் பரவக் கூடிய சாத்தியங்கள் உள்ளன எனவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்