அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க

🕔 October 3, 2017

லங்கையிலுள்ள ரோஹிங்ய அகதிகளை மூன்றாவது நாடொன்று அனுப்பி விடுமாறு சிலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இலங்கையில் தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகள் என, மொத்தம் 1333 பேர் உள்ளனர் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளரின் பாதுகாப்பின் கீழ் இவர்கள் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளருடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைக்கிணங்க, ரோஹிங்ய அகதிகள் மூன்றாவது நாடொன்றுக்கு மிக விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“1951ஆம் ஆண்டின் அகதிகள் உடன்படிக்கையில் இலங்கை ஒரு பங்குதாரராக இல்லை. எனவே, குறித்த உடன்படிக்கையின் அடிப்படையில் எந்தவிதமான பொறுப்பினையும் நமது நாடு ஏற்க வேண்டிய தேவையில்லை.

ஆனால், சர்வதேச சட்டங்களைக் கொண்ட நாடுகள், அகதிகள் விவகாரத்தினை மனிதாபிமானத்தோடு அனுக வேண்டும். அகதிகளுக்கு இந்தியாக தற்காலிக வசதிகளைச் செய்து கொடுத்திருந்தது. அகதிகள் உடன்படிக்கையில் நாம் கையெழுத்திடவில்லை என்றாலும், 2008ஆம் ஆண்டிலிருந்து அகதிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுத்து வருகின்றோம்.

இலங்கைக்கு 2008, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இலங்கைக்கு வந்த அகதிகள், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளரின் ஊடாக, மூன்றாம் நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடா போன்ற தேசங்களுக்கு, அகதிகள் உடன்படிக்கைக்கு இணங்க அனுப்பப்பட்டனர்.

மேற்படி நாடுகள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளருடனான உடன்படிக்கையில் இணைந்து கொண்டவை என்பதனால், அவை – அகதிகளுக்கு நிரந்தரமான வசிப்பிடங்களை வழங்க தயாராக உள்ளன.

இலங்கைக்கு வந்துள்ள மியன்மார் அகதிகள் – மியன்மாரிலிருந்து வரவில்லை. அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து படகொன்றில் கடல் வழியாகச் செல்லும்போது, இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து விட்டனர். அதனால், அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 2008ஆம் ஆண்டிலிருந்து இப்படித்தான் நடந்து வருகிறது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளரிடம் அகதிகள் கையளிக்கப்பட்ட பின்பு, அவர்களுக்கு வசதிகளை நாங்கள் வழங்க வேண்டுமென்கிற எந்தவிதமான கடப்பாடும் இல்லை. ஐ.நா. அகதிகளுக்கான ஆணையாளர் அலுவலகமே அதனைப் பார்த்துக் கொள்ளும்.

இலங்கையில் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை 728 அகதிகள் உள்ளனர். இவர்களில் ஆப்கானிஸ்தான் நாட்டவர் 113 பேர், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் 07 பேர், மாலைதீவைச் சேர்ந்த 08 பேர், மியன்மார் நாட்டைச் சேர்ந்தோர் 38 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்தோர் 533 பேர், பலஸ்தீனத்தைச் சேர்ந்த 10 பேர், சோமாலியாவைச் சேர்ந்த ஒருவர், சிரியாவைச் சேர்ந்தோர் 14 பேர், துனீசியாவைச் சேர்ந்த ஒருவர், யெமன் நாட்டைச் சேர்ந்த 06 பேர் அடங்குகின்றனர்.

இவர்களை மூன்றாவது நாடொன்றுக்கு அனுப்புவதற்கான பொறுப்பினை ஐ.நா. அகதிகளுக்கான ஆணையாளர் ஏற்றுள்ளார்.

நாட்டிலுள்ள இந்த அகதிகள் தொடர்பான உண்மைகளை சமூகத்திலுள்ளவர்கள் அறிந்து கொண்டால், அவர்கள் தீவிரவாதிகள் போல் செயற்பட மாட்டார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்