குப்பைகளால் நிறையும் சாய்ந்தமருது: மக்களின் குற்றச்சாட்டும், மாநகரசபையின் பதிலும்

🕔 October 3, 2017
– றிசாத் ஏ காதர் –

ல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதான வீதியோரங்கள் கழிவுகள் நிரம்பிவழியும் இடங்களாக மாறியிருக்கின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள், அலுவலகத்துக்குச் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பல்வேறு விதமான அசௌகரியங்களை சந்திக்க நேருவதாக மக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலத்துக்கு அருகாமையில் அதிகளவான கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இவ்வழியால் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்கள் மிகச் சிரமப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. இங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உணவாக உட்கொள்வதுக்கு பிராணிகள் அதிகளவில் ஒன்று சேர்வதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் அந்த வீதியினைக் கடந்து செல்வதாகக் கூறுகின்றனர். குறித்த பகுதியில் பல்வேறு அரச அலுவலகங்கள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருதுப் பிரதேசத்தின் கழிவுகளை ஒன்றுசேர்த்து அகற்றுவதுக்கு பொருத்தமான இடமாக இவ்விடம் காணப்படுமானால், கழிவுகளை முறையாக சேமிப்பதற்கான நடவடிக்கைகளை மாநகர சபை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும், சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்னால் “குப்பைகளை கொட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது” என அறிவுறுத்திய போதும், அவ்விடத்திலும் அதிகளாவான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் பொதுமக்களுக்கு எதிராக மாநாகர சபை சட்டநடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டும் மக்களிடம் உள்ளது.

பொதுவாக கழிவுகளை அகற்றுவதுக்கு நாடுபூராகவும் முறையான திட்டங்கள் நடைமுறையில் உள்ள போதிலும், கல்முனை மாhநகர சபை இது விடயத்தில் பொடுபோக்குடன் செயற்படுவதாகவே அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில், “மாநகர சபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்; எமது மாநகர சபை ஊழியர்கள் சென்று நாளாந்தம் கழிவுகளைச் சேகரிக்கின்றனர். சாய்ந்தமருது பிரதேச மக்கள் தத்தமது வீட்டுக் கழிவுகளை முறையாக சேமித்து வைத்தால், அவற்றினை சேகரிக்க முடியும். ஆனால் இங்குள்ளவர்கள் வீதிகளில் தத்தமது கழிவுகளை கொட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியாது” என்கின்றார்.

“நமது சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு  மாநகர சபைக்கு மட்டுமானதல்ல. நம் எல்லோருக்குமானது. எனவே வீதிகளில் கழிவுகளை கொட்டுவதனால் வெளிப் பிரதேச மக்கள் பாதிக்கப்படுவதுக்கு முன்னர், அந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களே முதலில் பாதிப்படைகின்றனர். அதனை ஒவ்வொருவரும் மனதில் நிலைநிறுத்தி சூழல் பாதிப்படையாத வகையில் கழிவுகளை சேமித்து, வழங்குவதுக்கு முன்வருதல் வேண்டும்” எனவும் அந்த அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்