புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு

🕔 October 2, 2017

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சமஷ்டி ஆட்சி முறைமையொன்று அமுலுக்கு வரவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒருமித்த நாடு என்று தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் விமல், இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஒருமித்த என்பது ‘எக்சத்’ என்கிற சிங்கள வார்த்தையைக் குறிப்பதாகும். எனவே, தமிழில் ஒரு பதத்தையும், சிங்களத்தில் ஒரு பதத்தையும் புதிய வரைவில் சேர்த்துள்ளனர்.

சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக ‘ஏக்கிய’ என்கிற பதத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

அதேவேளை, ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்கிற ஆங்கில வார்த்தை, புதிய வரைவில் இல்லாது செய்யப்பட்டுள்ளது.

‘ஏக்கிய’ என்கிற பதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்.

அத்துடன் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபித்து, அதில் சிங்களவர் ஒருவரையும், தமிழர் ஒருவரையும், முஸ்லிம் ஒருவரையும் நீதிபதிகளாக நியமிக்கவுள்ளனர்.

நீதிமன்ற செயற்பாடுகளில் இதுவரை காலமும் இன அடிப்படை பின்பற்றப்படவில்லை. ஆனால், இப்போது அதனையும் செய்து விட்டனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்