கரையோர மாவட்ட முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கைக்கு மு.கா. சமர்ப்பிக்கவில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன

🕔 October 2, 2017

– மப்றூக், றிசாத் ஏ காதர் –

ரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கும் பொருட்டு, கரையோர மாவட்டம் தொடர்பான எவ்வித முன்மொழிவினையும் முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பிக்கவில்லை என்று, அரசியலமைப்பு சபையினுடைய வழிப்படுத்தும் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன ‘புதிது’ இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

கரையோர மாவட்டம் தொடர்பான முன்மொழிவினை அரசியலமைப்பு சபைக்கு தாம் சமர்ப்பித்த போதிலும், இடைக்கால அறிக்கையில் அது உள்ளடக்கப்படவில்லை என்று, முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் கூறிவரும் நிலையிலேயே,  கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரசின் குற்றச்சாட்டு தொடர்பில், கலாநிதி ஜயம்பதியிடம் ‘புதிது’ செய்தித்தளம் சார்பில் வினவியபோதே, அவர் இந்தப் பதிலை வழங்கினார்.

இது தொடர்பாக, அவர் மேலும் கூறுகையில்;

“இடைக்கால அறிக்கையில் உள்ளடக்குவதற்கான முன்மொழிவுகளை ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு, அனைத்துக் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதமான முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கவில்லை.

ஆனால், முன்னர் ஒரு தடவை முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்த ஒரு முன்மொழிவில் புதிய மாவட்டம் தொடர்பான யோசனையினை முன்வைத்திருந்தது. ஆனால், இடைக்கால அறிக்கைக்காக, நாம் முன்மொழிவினை வழங்குமாறு கேட்டபோது, முஸ்லிம் காங்கிரஸ் எந்தவித முன்மொழிவினையும் வழங்கவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், இலங்கையில் 26ஆவது நிருவாக மாவட்டமாக, கரையோர மாவட்டம் அமைய வேண்டும் என்கிற முன்மொழிவொன்றினை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்