08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது

🕔 September 22, 2017

லங்கையிலிருந்து 8.8 கோடி ரூபாய் பெறுமதியான பணத்தை துபாய்க்கு கடத்த முற்பட்ட இளம் ஜோடி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

குறித்த ஜோடியினர், விமான நிலையத்தின் விசேட வழி ஊடாக தமது பொதிகளுடன் செல்ல முயற்சித்த போது, சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்ட சமயம் சிக்கிக் கொண்டனர் என்று, சுங்க பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

24 வயதுடைய ஆணும், 22 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 6.30 மணிக்கு துபாய் செல்லவிருந்த யு.எல். 225 விமானத்தில் இவர்கள் பயணிக்கவிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கைப்பற்றப்பட்ட பணத்தில் 1000 ரூபாய் நோட்டுக்கள் 4.4 மில்லியன், 45 ஆயிரம் அமெரிக்க டொலர், 35 ஆயிரம் யூரோ, 04 ஆயிரம் ஓமான் றியால், 2685 பஹ்ரைன் றியால்,  599,500 சஊதி றியால், ஐக்கிய அரபு ராஜியத்தின் திர்ஹம் 75 ஆயிரம் உள்ளடங்கியிருந்தன.

கைப்பற்றப்பட்ட பணம், கறுப்பு நிற பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்டிருந்தாக, சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள், மூன்றாம் தரப்பொன்றுக்காக இந்தப் பணத்தை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வருடத்தில் மட்டும் இவ்வாறான 17 கடத்தல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்போது 32 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கட்டுநாயக்க விமான நிலைய பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்