மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜம்மியத்துல் உலமா சபையும்: யார் அந்தப் பாவி

🕔 September 20, 2017

– அஹமட் –

மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தேசியக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என, அனைவரும் இன்று ஆதரவளித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால், அந்தச் சட்டமூலத்தை வெற்றிபெறச் வைத்து விட்டனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள, மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலமானது, முஸ்லிம் சமூகத்துக்கே அதிக பாதிப்பினை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அப்படியென்றால், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தமையின் மூலம், தமது சமூகத்துக்கு – சொந்தச் செலவில் சூனியம் வைத்து விட்டார்கள் என்பது உறுதியாகிறது.

இது இவ்வாறிருக்க, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று செவ்வாய்கிழமை அழைத்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினர், இந்த திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அந்த விபரம் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில்தான், மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இன்று ஆதரவளித்திருக்கின்றனர்.

அப்படியானால்;
இந்த சட்டமூலத்தை ஆதரிக்குமாறு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கூறியிருந்ததா?
அல்லது;
மேற்படி சட்டமூலத்தை எதிர்க்குமாறு ஜம்மியத்துல் உலமாசபை கூறியிருந்தும், அதற்கு மாறாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டார்களா?
என்பதை, ஜம்மியத்துல் உலமாசபை தெளிவுபடுத்த வேண்டும்.

இன்னொருபுறம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், இந்த திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையானது, முஸ்லிம் மக்கள் மத்தியில் எதுவித அதிர்ச்சிகளையோ, ஆச்சரியங்களையோ ஏற்படுத்தவில்லை. இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஹக்கீம் வாக்களித்திருந்தால்தான், அது ஆச்சரியமான விடயமாக அமைந்திருக்கும்.

ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுத்தீன் மீது முஸ்லிம் சமூகத்துக்கு ஏதோவொரு வீதத்தில் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பினை மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் நிறைவேற்றவில்லை என்பது, ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் மாகாணசபை பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக் கூடிய ஒரு சட்டமூலத்தை ஆதரித்தமை மூலம், நியாயப்படுத்த முடியாத தவறொன்றினை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

இதற்கான பிராயச் சித்தம், இப்போதைக்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்