துரோகம் 20

🕔 September 14, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமென நாம் எதிர்வு கூறியிருந்தோம். ‘பிராயச் சித்தம்’ என்கிற தலைப்பில் கடந்த 29ஆம் திகதியன்று எழுதிய கட்டுரையிலேயே அதை கூறியிருந்தோம். அது அப்படியே நடந்திருக்கிறது.

20ஆவது சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் நடத்தப்படவிருந்த வாக்கெடுப்பை இரண்டு முறை ஒத்தி வைத்த பின்னர், தமக்குத் தோதான ஒரு தருணத்தில் 20ஐக் களமிறக்கி, முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வென்று கொடுத்துள்ளார்.

எந்தவொரு மாகாண சபையிலும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பித்து வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில், இத்தனை இழுத்தடிப்புகள் இடம்பெறவில்லை. ஆனால், கிழக்கு மாகாண சபையில் ஏகத்துக்கு இழுத்தடித்தனர்.

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, கிழக்கு மாகாண சபையில் வெற்றிபெற வைத்து விட வேண்டும் என்கிற முடிவுடன், அந்தச் சபையின் முதலமைச்சர் இருந்தார். அவரின் விருப்பத்தை நிறைவேற்றவதற்கான சாத்தியங்கள் உருவாகும் வரை, வாக்கெடுப்பை ஒத்தி வைத்துக் கொண்டு வந்தனர்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, கிழக்கு மாகாண சபையிலுள்ள அனைத்து உறுப்பினர்களுடனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நேரடியாகவும் தூதுவர்களை அனுப்பியும் பேசினார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், கிழக்கு மாகாண சபையிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஏழு பேரும், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் எனக் கூறியிருந்தோம்; அவ்வாறே நடந்துமுள்ளது.

கிழக்கு மாகாண சபையிலுள்ள எதிரணி உறுப்பினர்களிடமும் ஆதரவு வழங்குமாறு முதலமைச்சர் தரப்பில் பேச்சுகள் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. அதற்கிணங்க, எதிரணி உறுப்பினர்கள் 10 பேரில் மூவர், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கச் சம்மதம் தெரிவித்திருந்தாக அப்போது கூறப்பட்டது. ஆனால், வாக்களிப்பின்போது, எதிரணி உறுப்பினர் ஒருவர் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, இன்னுமொருவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்ந்து கொண்டார். மிகுதி எட்டு எதிரணி உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனும் முதலமைச்சர் பேச்சுகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஆதரவளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், பின்னர் சம்மதித்து – கைகளை உயர்த்தியுமிருந்தனர். இடையில் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து, அரசியல் அரங்கில் பல்வேறு விதமாகப் பேசப்படுகிறது.

எவ்வாறிருந்த போதும், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக நடந்து கொள்ளுமாறு முதலமைச்சர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை எதிர்க்கட்சியிலுள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் நிராகரித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் சார்பாக தூது அனுப்பப்பட்டமையை, கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினரும் முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ். சுபையிர், ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“முதலமைச்சரும் அவருடைய கட்சியினரும், எதிர்க்கட்சி உறுப்பினர்களான எங்களோடு பேரம்பேசி, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்குமாறு தூது அனுப்புகின்ற நிலைமைகளைப் பார்க்கின்ற போது, வேடிக்கையாகவுள்ளது” எனத் தெரிவித்திருந்த மகாணசபை உறுப்பினர் சுபையிர், “பதவி வெறிபிடித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், தனது பதவியை ஒரு வடம் தக்கவைத்துக் கொள்வதற்காக,  மாகாண சபையின் அதிகாரங்களைத் தாரை வார்ப்பதற்கு துணைபோகின்ற கேவலம் குறித்து, முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது” என்றும் விசனப்பட்டிருந்தார்.

கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை வென்று கொடுப்பதற்கு முதலமைச்சர் காட்டிய ஆர்வம் ஒருபுறமிருக்க, முதலமைச்சருடைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இது தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் இருந்தது, இருக்கிறது என்பது பற்றியும் இந்த இடத்தில் பேச வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடனும், வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் ஒக்டோபர் முதலாம் திகதியுடனும் நிறைவுக்கு வருகின்றன.

இச் சபைகள் கலைந்தவுடன் அவற்றுக்குரிய தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும். ஆனால், 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இந்தச் சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல், அவற்றின் பதவிக் காலங்கள் நீடிக்கப்படும்.

இந்த நிலையில்தான், “பதவிக் காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும்” என்று, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் சில வாரங்களுக்கு முன்னர் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

மு.கா தலைவரின் கோரிக்கையின்படி, பதவிக் காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்துவதாயின், 20ஆவது திருத்தச் சட்டமூலம் அமுலுக்கு வரக் கூடாது. எனவே, “பதவிக் காலம் நிறைவடையும் மாகாண சபைகளின் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும்” என்கிற, மு.கா தலைவரின் கூற்றை, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான உள் அர்த்தமுடையதாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

இருந்தாலும் கூட, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகவோ, அல்லது அந்தச் சட்டமூலம் தேவையற்றது என்றோ, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எந்தவொரு இடத்திலும் கூறவில்லை. மட்டுமன்றி, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று, தனது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அறிவுறுத்தி இருக்கவுமில்லை. ஆக, மு.கா தலைவரின் இந்த நிலைப்பாடுகள், பாரிய சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தன.

ஒரு மாகாண சபையின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். மாகாண சபையின் பதவிக் காலம் குறித்து, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் 154(உ) பிரிவு பின்வருமாறு கூறுகிறது. ‘மாகாண சபையொன்று முன்னரே கலைக்கப்பட்டாலொழிய, அதன் முதலாவது கூட்டத்துக்கென நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஐந்து ஆண்டு காலப்பகுதிக்கு தொடர்ந்திருத்தல் வேண்டும் என்பதுடன், சொல்லப்பட்ட ஐந்து ஆண்டு காலப்பகுதி முடிவடைதல், சபையின் கலைப்பொன்றாகச் செயற்படுதலும் வேண்டும்’.

இதன்படி பார்த்தால், மாகாண சபைத் தேர்தல்களின் போது, ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அதற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்து, மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மாகாண சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதென்பது, மக்கள் ஆணைக்கு மாறான செயற்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன தனது ஆட்சிக் காலத்தின்போது, அப்போதைய நாடாளுமன்றத்தை மேலும் ஒரு பதவிக் காலத்துக்கு தேர்தலின்றி நீடிக்கத் தீர்மானித்தார். அதற்காக, 1982ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தினார். அந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். அதற்கிணங்க பொதுத் தேர்தல் இல்லாமலேயே அப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டது.

ஆக, மக்கள் வழங்கிய ஆணை தொடர்பில் மக்கள்தான் மாற்றங்களைச் செய்ய வேண்டுமே தவிர, அதை அரசியல்வாதிகள் மேற்கொள்ள முடியாது. மாகாண சபையை ஐந்து ஆண்டு காலம் மட்டும் நடத்திச் செல்வதற்கான ஆணையை மக்களிடம் பெற்றுவிட்டு, பின்னர் அதற்கு அதிகமான காலம் அதைக் கொண்டு நடத்துவதென்பது மிகப்பெரிய மோசடியாகும். அந்த மோசடிக்கு யார் துணை போனாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான வாக்கெடுப்பு, கிழக்கு மாகாண சபையில் திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சபை ஆரம்பிக்கும் போது ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எவரும் அங்கு வருகை தந்திருக்கவில்லை.

எதிரணியினரில் சிலர் மட்டும் சபைக்கு சமூகமளித்திருந்தார்கள். அதனால், காலை 11.00 மணி வரை, சபையை ஒத்தி வைப்பதாக தவிசாளர் அறிவித்தார். அதற்கிணங்க மீண்டும் 11.00 மணிக்கு சபை கூடியபோது, எதிரணியினர் சபைக்கு சமூகமளித்திருந்தனர். ஆளுந்தரப்பில் ஒரேயொரு உறுப்பினர் மட்டுமே வருகை தந்திருந்தார். இதனால், சபையை நடத்திச் செல்வதற்கான கோரம் போதாது எனக் கூறப்பட்டு, மீண்டும் 1.00 மணிவரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை வென்றெடுப்பதற்கான சாத்தியங்கள் கைகூடி வரும் வரையில்தான் திங்கட்கிழமையன்றும் சபை நடவடிக்கைகளை ஆளுந்தரப்பினர் இவ்வாறு இழுத்தடிப்புச் செய்தனர். ஆளுந்தரப்பினரின் இந்த நடவடிக்கை காரணமாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விசனமடைந்ததோடு, அவர்கள் தமது அதிருப்தியை ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தினர். கிழக்கு மாகாண சபையின் கௌரவத்தை முதலமைச்சர் மலினப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை இதன்போது குற்றம்சாட்டினார்.

மாகாண சபை முறைமை வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதற்காக  உருவாக்கப்பட்டதாகும். நெல்லுக்குப் பாய்ச்சிய நீர், புல்லுக்கும் பாய்ந்தது போல், வடக்கு – கிழக்கை மனதில் வைத்து உருவாக்கிய மாகாண சபை முறைமையானது, ஏனைய மாகாணங்களுக்கும் கிடைத்தது.

இவ்வாறானதொரு நிலையில், மாகாண சபையின் அதிகாரங்களில் கை வைக்கும் வகையிலான 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை, சிங்களவர்களைப் பிரிதிநித்துவப்படுத்தும் தென் மாகாண சபை எதிர்த்து வாக்களித்துள்ள போது, கிழக்கு மாகாண சபையிலுள்ள சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் ஆதரித்துள்ளமை கவலையும் அவமானமும் நிறைந்ததாகும்.

கிழக்கு மாகாண சபையில் இவ்வாறானதொரு நிலை உருவாகியுள்ளமைக்கு, சுயநல அரசியலே காரணமாகும். ஒவ்வொருவரும் தமது சுகபோகங்கள் குறித்தும், தமக்குக் கிடைக்கவுள்ள வரப்பிரசாதங்கள் தொடர்பிலும் மட்டுமே சிந்தித்தமையினால்தான், 20ஆவது திருத்தத்துக்கு அங்குள்ள உறுப்பினர்களில் அதிகமானோர் ஆதரவளித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாகக் கைகளை உயர்த்திய உறுப்பினர்களின் ‘காட்டில்’ நல்ல ‘மழை’ பெய்யக் கூடும். ஆனால், சிறுபான்மை மக்களுக்கு மாகாணசபை முறைமையினூடாகக் கிடைத்த கொஞ்ச நஞ்ச அதிகாரங்ளையும் பாதுகாக்க முடியாமல் போயிருக்கிறது.

மாகாண சபைகளின் அதிகாரங்களில் சிலவற்றை மத்திய அரசு கையகப்படுத்திக் கொள்ளும் வகையிலான ‘திவிநெகும’ சட்டமூலம், 2012ஆம் ஆண்டு, கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போதும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாகவே வாக்களித்தார்கள். அதுமட்டுமன்றி, தமது செயலை நியாயப்படுத்தியும் பேசினார்கள். இப்போது, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, அதையும் நியாயப்படுத்துவதற்காக எதையெதையோ பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

சில வரப்பிரசாதங்களுக்காகவும் இன்னும் ஓராண்டு பதவிக் கதிரையில் அமர முடியும் என்பதற்காகவும், 20க்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையில் கைகளை உயர்த்தியவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் கண்களை கொடுத்து, ஏதோ ஒரு சித்திரத்தை வாங்கியிருக்கிறார்கள்.

காலம் சில குற்றங்களை மன்னிப்பதில்லை.

நன்றி: தமிழ் மிரர் (14 செப்டம்பர் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்