பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

🕔 September 10, 2017

– எஸ். அஷ்ரப்கான் –

தவி வெறிபிடித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், ஒரு வருடம் தனது முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக,  மாகாண சபையின் அதிகாரங்களை தாரை வார்ப்பதற்கு துணைபோகின்ற கேவலம் குறித்து, முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்தினை கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில், ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரித்தபோதே அவர் மேற்கன்டவாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“மாகாண சபைகளின் அங்கீகாரத்தினை பெறும்பொருட்டு 20வது திருத்தச்சட்டமூம் மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இச்சட்டமூலம் ஊவா மற்றும் தென் மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபை உட்பட சிங்கள பிரதேசங்களிலுள்ள ஏனைய மாகாண சபைகளிலும் இச்சட்டமூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 07ஆம் திகதி இச்சட்டமூலம் கிழக்கு மாகாண சபையிலும் சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. அன்றைய தினம் மாகாண சபை அமர்வு இடம்பெறுவதற்கு முன்னர் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில், இந்த விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன, இச்சட்டமூம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை தோற்கடிப்போம் என்று முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், இச்சட்ட மூலத்தினை ஆதரிப்பதனூடாக கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நீடிக்கப்படும், நாம் அனைவரும் இரண்டு வருடங்கள் சபையை கொண்டு செல்லலாம். இதனை நாம் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இதில் திருத்தங்கள் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனக்கூறி இதனை நிறைவேற்றுவதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது பதவியினையும் சுயநலத்தினையுமே பார்த்தாரே தவிர, கிழக்கு மாகாண மக்களை அவர் கருத்திற்கொள்ளவில்லை.

இந்த விடயத்தில் சிங்கள பிரதேசங்களிலுள்ள மாகாண சபைகள் கூட தங்களது அதிகாரங்களை இழப்பதற்கு தயாராக இல்லாத சூழ்நிலையில், கிழக்கு முதலமைச்சர் இதற்கு துணைபோனதன் மர்மம்தான் என்னவென கிழக்கு மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். கிழக்கு முதலமைச்சரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து ஏனைய சமூகங்கள் ஏளனம் செய்யும் நிலைமைகளை அவதானிக்க முடிகிறது.

கிழக்கு மாகாண சபையிலே தங்களுடன் ஆட்சியில் பங்காளிகளாக இருக்கின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் 20வது சட்டமூலத்துக்கு ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் என கருதிக்கொண்ட முதலமைச்சரும் அவருடைய கட்சியினரும், எதிர்க்கட்சி உறுப்பினர்களான எங்களோடு பேரம்பேசி, இதற்கு ஆதரவளிக்குமாறு தூது அனுப்புகின்ற நிலைமைகளைப் பார்க்கின்ற போது வேடிக்கையாகவுள்ளது. இவர்கள் தங்களுடன் ஆட்சியில் பங்காளிகளாக இருக்கின்றவர்களுக்கு தெரியாமலே அவர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டு இதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த நாட்டிலே சர்வதிகாரியாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக்குவதற்கு இவர்களே 18வது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் துரோகமிழைத்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார். அதே போன்றுதான் இன்று 20வது திருத்தச் சட்டமூலத்துக்கும் ஆதரவளித்து பெரும் துரோகமிழைக்க முனைகின்றனர்.

நாங்கள் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ பதவியில் இருப்பதற்காக, எமது சமூகத்துக்கு துரோகமிழைத்தவர்களாகவும் மாகாண சபைகளின் அதிகாரத்தினை பறிகொடுத்த வரலாற்று துரோகிகளாகவும் மாறிவிட முடியாது. சமூக துரோகிகளை அடையாளம் காண்பதற்கு இது நல்லதொரு தருனம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்