இலங்கை – பங்களாதேஷ் கூட்டு வேலைத்திட்ட அமர்வு, வருட இறுதியில் இடம்பெறும்: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

🕔 September 7, 2017

லங்கைக்கும் பங்களாதேஷூக்குமிடையிலான கூட்டு வேலைத்திட்ட குழுவின் உயர்மட்ட அமர்வு, இந்த வருட இறுதிப்பகுதியில் நடைபெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் டொபையில் அஹமட்டை சந்தித்து பேச்சு நடத்திய பின்னரே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் கூறுகையில்;  “இரண்டு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர வர்த்தக செயற்பாடுளை மேலும் அதிகரிக்கரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் அதாவது, 2012 தொடக்கம்  2016ஆம் ஆண்டு காலப்பகுதியில்   வர்த்தக வளர்ச்சி 43 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் வருமானமாக  142 மில்லியன் அமெரிக்க டொலரை எய்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் வர்த்தக வளர்ச்சியின் வீதம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பரஸ்பர நாடுகளின் வர்த்தக உறவை மேம்படுத்தும் காலம் தற்போது கனிந்து வருகின்றது” என்றார்.

மேலும், இரண்டு நாடுகளுக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்பாட்டைக் கைச்சாத்திடுவதற்கான அவசியம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன்; பங்களாதேஷ் அமைச்சரின் கூற்றினை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், இரண்டு நாடுகளின் தற்போதைய வர்த்தக வளர்ச்சியின் பிரதிபலிப்பு போதுமானதாக இல்லையெனவும் குறிப்பிட்டதோடு, இவ்வருட இறுதிக்குள் இரண்டு நாடுகளுக்குமிடையிலான மூன்றாவது கூட்டு வேலைத்திட்டக் குழு அமர்வை நடாத்துவதற்கு முடியும் எனவும் கூறினார்.

சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பான எண்ணக்கருக்களை தமது அமைச்சின் அதிகாரிகள்  ஆராய்ந்து வருவதாகவும், கடந்த வருடம் ஜுலை மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன டாக்காவுக்கு விஜயம் செய்த பின்னர், வர்த்தக உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பங்களாதேஷூடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இலங்கை கைசாத்திட்டால்
, தென்னாசியாவிலேயே அதிகளவான சுதந்திர வர்த்தக  உடன்பாடுகளை மேற்கொண்ட நாடாக இலங்கை திகழும் எனவும் அமைச்சர் றிசாட் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்தச் சந்திப்பில் பங்களாதேஷின் இலங்கைக்கான துதூவர் ரியாஸ் ஹமிதுல்லாவும் பங்கேற்றிருந்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்