கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார்

🕔 September 6, 2017

– முன்ஸிப் அஹமட் –

நாட்டார் பாடல்களைப் பாடுவதிலும், சுயமாக பாடல்களை இட்டுக் கட்டுவதிலும் புகழ்பெற்ற மீரா உம்மா, இன்று புதன்கிழமை இறக்காமத்தில் காலமானார்.

கண் பார்வை இழந்த இவர், தனது கணீர் குரலால் நாட்டார் பாடல்களைப் பாடுவதில் கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்றவராவார்.

இவருடைய பாடும் திறமைக்காக இவருக்கு தேசிய ரீதியிலும், பிராந்தியத்திலும் ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.

இறக்காமம் பிரதேசத்தில் காசிம்பாவா அகமதுலெப்பை – ஆதம்பாவா அலிமாநாச்சி ஆகியோரின் இளைய மகளாக  1950 ஆம் ஆண்டு மீரா உம்மா பிறந்தார். இவர் பிறப்பிலேயே பார்வையை இழந்திருந்தார்.

சிறுவயதில் தந்தையை இழந்த மீரா உம்மா, தனது 05 வயதிலேயே கவி பாடத் தொடங்கியதாக டொக்டர் எஸ்.எச்.எம். ஜெமீலுக்கு வழங்கிய நேர்காணலொன்றில் கூறியிருந்தார்.

சுயமாக பாடல்களை இயற்றி, அவற்றினை அந்த இடத்திலேயே பாடுவதில் மீரா உம்மா மிகச் சிறந்த திறமைசாலியாக இருந்தார்.

ஆரம்ப காலத்தில் தனது ஊரில் நடைபெற்ற சுன்னத் வைபவம், திருமண நிகழ்வுகள், மீலாத் விழாக்கள் மற்றும் கலை விழாக்களுக்கு மீரா உம்மாவை அழைத்து பாட வைத்தனர். காலப்போக்கில் ஏனைய கிராமங்களுக்கும் சென்று பாடினார். சினிமா பாடல் மெட்டுக்களில் தனது சொந்த வரிகளை இட்டுப் பாடினார். சொந்தமாக மெட்டமைத்தும் பாடினார்.

பின்னர் இலங்கை வானொலியில் பாடும் சந்தர்ப்பம் 1974ஆம் ஆண்டு மீரா உம்மாவுக்குக் கிடைத்தது. இதன் மூலம் நாடறிந்த பாடகியானார்.

முஸ்லிம் சமய விவகார பண்பாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர், ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’  எனும் மகுடத்தின் கீழ் 1991ம் ஆண்டு, ‘சவ்வதுல் அந்தலீப்’ என்ற பட்டத்தை மீரா உம்மாவுக்கு தனது அமைச்சின் மூலம் வழங்கிக் கௌரவித்திருந்தார்.

இவ்வாறு தனது பாடும் திறமைக்காக தேசிய ரீதியாகவும், தனது கிழக்கு மண்ணிலும் ஏராளமான விருதுகளை மீரா உம்மா பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்