தேசியப்பட்டியலை மறக்கடிக்கும் ‘போதை’ மருந்துடன், அட்டாளைச்சேனை வருகிறார் ஹக்கீம்

🕔 August 24, 2017

– நவாஸ் –

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளால், இதுவரையும் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று, அந்தப் பிரதேச மக்கள் கடுமையான விசனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  ‘அபிவிருத்திப் பெரு விழா’ எனும் பெயரில், மு.கா. தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்வொன்று அட்டாளைச்சேனையில்  இடம்பெறவுள்ளது.

மு.கா. தலைவர் ஹக்கீமின் கீழுள்ள நகர அபிவிருத்தி அமைச்சினுடைய நிதியொதுக்கீட்டின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சுமார் 01 கிலோமீற்றர் தூரத்துக்கு 30 தெரு மின் விளக்குக் கம்பங்கள் நிர்மாணிக்கப்பட்டு, அதற்கான மின் விளக்குகளும் சில மாதங்களுக்கு முன்னர் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில், குறித்த தெரு மின் விளக்குகளை ஒளிர வைப்பதாகக் கூறி, இதுவரையில் இரண்டு முறை, அரசியல்வாதிகளால் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மு.கா. தலைவர் ஹக்கீம் – மூன்றாவது தடவையாக, மேற்படி தெரு மின் விளக்குகளை ஒளிர வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கால்நடை வைத்தியசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டது. அந்த வைத்தியசாலைக்கு தற்போது, 100 மீற்றருக்குட்ட சுற்று மதில் ஒன்றினை நிர்மாணித்து விட்டு, அதனையும் ஹக்கீம் திறந்து வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கான முகப்புப் பாதையினை அகலமாக்கும் பொருட்டு, ஏற்கனவே உள்ள குறுகலான பாதைக்கு அண்மித்த தனியாருக்குச் சொந்தமான காணியொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காணி கொள்வனவுக்காக, அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கணிசமான தொகை நிதிப் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இவ்வாறு பொதுமக்களின் பங்களிப்புடன் அகலமாக்கப்பட்ட வீதியினையும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஹக்கீம் திறந்து வைக்கவுள்ளார் என அறிய முடிகிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், எந்தவிதமான அபிவிருத்திகளையும் அட்டாளைச்சேனையில் செய்யாத நிலையில்தான், அங்கு ‘அபிவிருத்திப் பெருவிழா’ கொண்டாடப்படவுள்ளது. அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகத்தான் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஹக்கீம் வருகை தர இருக்கின்றார்.

ஆளே இல்லாத கடையில், டீ ஆத்துவதற்கும், ஒரு செங்கல்லைக் கூட  – எடுத்து வைக்காமல், ‘அபிவிருத்திப் பெரு விழா’ கொண்டாடுவதற்குமான தைரியம் மு.கா. தலைவருக்கு நிறையவே உள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனைக்கு வரும் மு.கா. தலைவர், பகிரங்க கூட்டமொன்றில் உரையாற்றுவார். அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கும், தற்போதைய அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும், மனங்குளிர ஹக்கீம் திட்டித் தீர்ப்பார்.

பிறகென்ன, அட்டாளைச்சேனைக்கான ‘தேசியப்பட்டியலை’ மறந்து விட்டு, கட்சிப் போராளிகள் தலைவரின் பேச்சுக்கு கைதட்டி மகிழ்வார்கள்.

இது தவிர வேறென்ன வேணும் நமக்கு.

நாரே தக்பீர் – அல்லாஹு அக்பர்!

Comments