சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம்

🕔 August 23, 2017

யுனெஸ்கோ வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, 2014ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் பரிஸ் தலைநகருக்குச் சென்றிருந்த, அப்போதைய ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, அரச பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மதுபானத்துக்காக செலவிட்டிருந்தமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.

மேற்படி வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐந்து நாட்களுக்கு பரிஸ் நகருக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரின் உறவினரான டேஸி பொரஸ் என்ற பெண்மணி  உட்பட நான்கு பேர் தமது பயணச்செலவாக இரண்டு கோடி ஐம்பது லட்சத்து எண்பதாயிரத்து அறுநூற்று எண்பத்தொரு ரூபாய் நாற்பத்து ஒன்பது சதங்கள் (2,508,0681.49) செலவிட்டனர்.

இதில், ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூற்று எட்டு ரூபாயை  (1,53,608.00 ) மதுபானங்களுக்கான செலவிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த, ஃபோ சீசன்ஸ் எனும் ஹோட்டலின் பற்றுச் சீட்டுக்களை பரிசீலனை செய்த போது, இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி சிராந்தி ராஜபக்ஷ, 2014 மே மாதம் 22ம் திகதி நாற்பத்து ஐந்தாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு ரூபாய்களை(45,864.00) மதுபானத்துக்காக செலவிட்டுள்ளார். 24ம் திகதி இரவு இரண்டு முறை பாவித்த மதுபானத்திற்காக ஒரு லட்சத்து ஏழாயிரத்து எழுநூற்று நாற்பத்து நான்கு (1,07,744) ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டல் பற்றுச்சீட்டுக்களை அவதானிக்கும் போது, இவ்விடயம் தெரிய வருகிறது.

குறித்த  அதே தினத்தில் நாற்பதாயிரத்து இருநூற்று இருபத்து இரண்டு (40,222.00) மற்றும் அறுபத்து ஏழாயிரத்து ஐநூற்று இருபத்து இரண்டு ரூபாய்களும் (67,522.00) மதுபானத்துக்க செலவிடப்பட்டுள்ளன. அந்த வகையில், மதுபானத்துக்காக சிராந்தி ராஜபக்ஷ செலவிட்டுள்ள மொத்த தொகை, ஒரு  லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூற்று எட்டு ரூபாய்கள் (1,53,608.00) ரூபாய்களாகும்.

சிராந்தி ராஜபக்ஷவுடன் தூதரக பெண் அதிகாரிகள் இருவரும் மேற்படி ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். சிராந்தி உள்ளிட்ட நான்கு பேர்களுக்கான ஹோட்டல் அறை மற்றும் உணவு செலவாக ஒரு கோடியே அறுபத்தொரு லட்சத்து எழுபத்தையாயிரத்து நாநூற்று அறுபத்தைந்து (161,75465) ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.

ஹோட்டல் பற்றுச் சீட்டுக்களைப் முழுமையாக பார்ப்பதற்கு: http://www.lankaevoice.com/wp-content/uploads/2017/08/Expenses_for_Paris_Vesak_Visit_of_Shiranthi_Rajapaksha-1.pdf

Comments

புதிது பேஸ்புக் பக்கம்