மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம், அரசியல் யாப்புக்கு முரணானதல்ல; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

🕔 August 23, 2017

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று பிற்பகல், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது, இதனை அவர் அறிவித்ததார்.

அவர் மேலும் கூறுகையில்;

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)’ எனும் சட்டமூலத்துக்கு எதிராக ஆற்றுப்படுத்தப்பட்ட மனு சம்பந்தமாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

மனுதாரர் இந்தச் சட்டமூலம் தொடர்பான மனுவைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பவில்லையென நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானது அல்ல எனவும், அரசியலமைப்பின் 12(4) அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்துக்கான உரிமை ஏற்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்றது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

மாகாண சபைகளில் கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முப்பது சதவீதத்தை வழங்குவதற்கு வழிவகுக்கும் வகையிலேயே மாகாண சபைத் தேர்தலில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்; வேட்பாளர் பட்டியலில் 30 சதவீதத்தைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் வேட்புமனுவை நிராகரிக்கும் வகையிலான ஏற்பாடுகளும் இதில் இருக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்