சந்திக்கு வந்தது மு.கா.வின் குத்து வெட்டு; அலிசாஹிரை புறக்கணித்தார் ஹாபிஸ் நசீர்: மழுப்பி விட்டுப் போனார் ரஊப் ஹக்கீம்

🕔 August 21, 2017

– முன்ஸிப் அஹமட் –

றாவூர் நகர சபையின் கட்டடடித் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது, முஸ்லிம் காங்கிரசுக்குள் எழுந்துள்ள குத்து வெட்டின் காரணமாக, அந்த ஊரின் மூத்த அரசியல்வாதியும், மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா அந்த நிகழ்வினைப் பகிஷ்கரித்திருந்தார்.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதியாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பங்கேற்றிருந்தார். கிழக்கு மாகாண முதலமைச்சரும் கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

எவ்வாறாயினும், விழாவுக்கான அழைப்பிதழில் அலிசாஹிர் மௌலானாவுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்பதோடு, கட்டடத் திறப்பு விழா நினைவுக் கல்லில் அலிசாஹிர் மௌலானாவின் பெயர், திட்டமிட்டு இடம்பெறாமல் செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீரும், அலிசாஹிர் மௌலானாவும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள். இதனால், ஏறாவூர் அரசியலில் – தான் மட்டுமே தலையெடுக்க வேண்டுமென்கிற எண்ணத்தில், ஹாபிஸ் நசீர் இவ்வாறு செயற்பட்டு வருகின்றார்.

ஹாபிஸ் நசீருடைய இந்த செயற்பாடு தொடர்பில் மு.கா. தலைவர் அறிந்துள்ள போதும், அவரைக் கண்டிக்க முடியாத நிலையில் ஹக்கீம் உள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை மு.கா.வின் உட்கட்சி அரசியல் பற்றி அறிந்தோர் புரிந்து கொள்வர்.

நேற்றைய தினம், ஏறாவூர் நகரசபைத் திறப்பு விழா நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் உரையாற்றியிருந்தார். அதன்போது அலிசாஹிர் மௌலானாவை ஹாபிஸ் நசீர் திட்டமிட்டுப் புறக்கணித்திருந்தமையை பூசி மெழுகுவதற்கு ஹக்கீம் முயற்சித்தார். ஹாபிஸ் நசீரை கண்டிக்க முடியாமல் தவித்தார்.

அலிசாஹிர் மௌலானாவின் ஆதரவாளர்களை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், அவரின் பெயரை அங்கு ஹக்கீம் உச்சரித்தார் என்று, தெரிவிக்கப்படுகிறது.

இவற்றினையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஹாபிஸ் நசீரிடம் ஹக்கீம் மாட்டிக் கொண்டு விட்டதாகவே பலரும் பேசிக் கொள்கின்றனர்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்