சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, விரைவில் பிரகடனப்படுத்தப்படும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

🕔 August 12, 2017

– எம்.வை. அமீர் –

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்குரிய காலம் கனிந்துள்ளதாகவும், கூடிய விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பிரகடனப்படுத்தப்படும் என்றும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கென தனியான உள்ளுராட்சி சபையை கோரிய போது, பல்வேறு எதிர் அழுத்தங்களையும் பொருட்படுத்தாது அதனைப் பெற்றுத்தருவதாக பள்ளிவாசலில் வைத்தது தாம் வாக்குறுதியளித்ததாவும் அவர் கூறினார்.

வறிய மக்களுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை வேண்டும் எனும் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றித்தருவதாக வாக்களித்து, அதற்கான பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும் வாக்குறுதியை பெற்றுக்கொடுத்தது. அமைச்சர் றவூப் ஹக்கிம் தலைமையில் பல சந்தர்ப்பங்களில் சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயமாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வருகிறோம். தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. கூடிய விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பிரகடனப்படுத்தப்படும்.

சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயத்தில் என்னை சிலர் பிழையாக நோக்குகின்றனர். இந்த விடயத்தில் நான் மிகுந்த இறைஅச்சத்துடன் செயற்படுகிறேன். பள்ளிவாசலில் வைத்தே அதற்கான வாக்குறுதியளித்தேன்.

இப்பிராந்தியத்தில் அதிகபட்ச மக்கள் ஆதரவைப்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் பின்னிற்காது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 180 பயனாளிகளுக்கு 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பொறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்படுகின்றன. இவற்றினை பெறுவோருடைய வாழ்வாதாரங்களை உயர்த்த வேண்டு என்பதே எனதும் அரசாங்கத்தினதும் நோக்கமாகும்.

இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் உத்தியோகத்தர் எம். ஜௌபர், கணக்காளர் ஏ.எல்.எம். நஜிமுதீன் பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ.பாவா,  கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஷீர் மற்றும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஏ. நசார்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்