தேர்தலுக்கு தாரை வார்க்கப்படும் ஆசிரியர் தொழில்; கிழக்கு மாகாண சாக்கடை அரசியல்

🕔 August 5, 2017

– பெயர் குறிப்பிட விரும்பாதவர் –

கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட விசித்திரமான சாதனையொன்றை ஆசிரியர் நியமனத்துக்காக நிகழ்த்தியிருக்கிறது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு ஆசிரியர் நியமனம்தான் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையொன்றும் இல்லை. மாறாக ஏனைய துறைகளிலும் நியமனங்களை வழங்கி அக்குறைபாட்டை நிவர்த்தி செய்திருக்கலாம்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் ஆசிரியர் நியமனம்தான் வழங்க வேண்டும் என்ற தேவை கிழக்கு மாகாண சபைக்கு ஏன் தோன்றியது.

பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினைக்கு ஏனைய மாகாணங்களை விட விசித்திரமான முடிவாக; ‘அரச சேவையில் உள்ளவர்கள் ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க முடியாது’ என்பது சிறந்த தீர்வாக அமையப்பெறாது. அப்படியாயின் ஆசிரியர் தொழிலை எதிர்பார்ப்பவர்கள் வேலையற்ற பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம். ஆசிரியர் தொழிலை எதிர்பார்த்திருப்பவர்கள் எந்த பரீட்சையும் எழுதாமல் அரச வேலையில்லாமல் அலைய வேண்டுமா?

ஆசிரியர் தொழிலை பெற வேண்டும் என்ற இலட்சியம் கொண்டவர்களை அலட்சியப்படுத்துபவர்கள் யார்? தொழில் உரிமை என்பது, இம் மாகாணத்தில் விரும்பிய உத்தியோகத் தொழிலை செய்ய முடியாதா? ஆசிரியர் பிரமாணக் குறிப்பில் இவ்வாறான வரையறை குறிப்பிடப்பட்டுள்ளதா? மேலும் ஆசிரியர் தொழில் நியமனம் என்பது இனி அரசியல்வாதிகளின் கோரிக்கைகளுக்குள் புதையுண்டு விடுமா?அரசியல் அதிகாரங்களை தன்னகத்தே கொண்டிருப்பவர்களுக்கு அரச சேவையில் இருப்பவர்களை விண்ணப்பிக்க செய்ய முடியாமல் போய்விட்டதா? இல்லை நீங்கள்தான் முன்னின்று விண்ணப்பிக்க முடியாமல் செய்தீர்களா? நாங்கள்தான் அதனைச் செய்தோம் என்று, இப்போது பதிலளிக்க முடியும். ஏனெனில் வேலையற்ற பட்டதாரிகளின் பட்டாளம் கண்டு அப்படிக் கூற முடியும் . தேர்லை மனதில் வைத்து செயற்படும் அவரசியல்வாதிகளுக்கு, இது தேவையாக இருக்கிறது.

ஆசிரிய தொழிலை எதிர்பார்த்து போட்டிப்பரீட்சையில் தோற்றி அதில் துவண்டு மீண்டும் வெற்றி கொள்ள வேண்டுமென்று நினைத்த அரச சேவையில் உள்ளவர்களுக்கும், புதிதாக வேறு நியமனத்தை பெற்று வேறு தொழிலில் இருப்பவர்களுக்கும், ஆசிரியர் தொழிலை எட்டாக்கனியாக்கியது நீங்கள் செய்யும் துரோகமாகத்தான் இருக்கும். குறிப்பிட்டு சொல்வதாயின் கடந்த காலங்களில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட சில தரக்குறைவான வார்த்தைகளுக்கு இப் போட்டிப்பரீட்சையின் வரையறை ஒரு கைமாறா?

ஆசிரியர் குறிப்பு: இந்தப் பதிவு குறித்து, மாற்றுக் கருத்துள்ளவர்கள் புதிதுக்கு எழுதுங்கள். வெளியிடுவோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்