ஜனாதிபதிக்கு கிடைத்த புராதன வாள், தேசிய சொத்தாக்கப்பட்டது

🕔 August 2, 2017

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நினைவுப் பரிசாக வழங்கிய புராதன வாள், தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கபட்டுள்ளது.

குறித்த வாளினை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று புதன்கிழமை, தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த வாள் கண்டி யுகத்துக்கு உரியதாகும். 1906 ஆண்டில், இது இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. பின்னர், அங்கு நடைபெற்ற புராதன தொல்பொருள் ஏலவிற்பனையில் குறித்த வாளினை ரஷ்யா கொள்வனவு செய்தது.

இந்த வாள் மிகவும் அரிய வகை அரச ஆயுதமாகும். மட்டுமன்றி, வரலாற்று ரீதியிலும் பெறுமதியுடையதாகும். ரஷ்ய கூட்டரசாங்கத்தின் குற்றவியல் சட்ட கோவையின் 243 ஆம் பிரிவில் உள்ளடங்கும் புராதன பெறுமதியுடைய பொருட்கள் மற்றும் பண்பாட்டு பெறுமதியுடன் கூடிய பொருட்களுக்கு சேதம் விளைவித்தல், அழித்தல் குற்றமாக கருதப்படுகிறது. அந்த புராதன பொருட்களை பாதுகாக்கும் பிரிவில் இந்த வாளும் உள்ளடங்கியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார். இலங்கை அரச தலைவர் ஒருவர் 44 ஆண்டுகளுக்கு பின்னர்  ரஷ்யாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். இதன்போது, ஜனாதிபதி மைத்திரிக்கு உயர் வரவேற்பாக ரஷ்ய ஜனாதிபதியினால் இந்த புராதன வாள் வழங்கப்பட்டது.

இந்த பெருமைமிகு பரிசை தேசிய உரிமையாக்கும் பொருட்டு, தேசிய நூதனசாலையில் வைப்பதற்காக, கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவிடம் ஜனாதிபதி ஒப்படைத்தார்.

அதற்கான நன்றிக் கடிதம் மற்றும் நினைவுப் பரிசு, ஆகியவற்றினை, தேசிய நூதனசாலை பணிப்பாளர் சனூஜா கஸ்தூரியாராச்சி, ஜனாதிபதிக்கு வழங்கினார்.

தேசிய நூதனசாலையை பார்வையிட்ட ஜனாதிபதி ஆயுத கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மேற்படி வாளையும் பார்வையிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்