அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்தில், விசேட தேவையுடையோர் கல்வியில் மோசடி; கல்விப் பணிப்பாளர் அசமந்தம்

🕔 August 2, 2017

– றிசாத் ஏ காதர் –

க்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஐந்து பேர், அங்கு உள்ளபோதும், குறித்த ஆசிரியர்கள் எவரும், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்று, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஆயினும், விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும் பொருட்டு, ஆசியர்களுக்கு வழங்கும் மேலதிக படியினை, மேற்படி ஆசிரியர்கள் ஐவரும் தொடர்ச்சியாகப் பெற்று வருவதாக அறிய முடிகிறது.

இந்த மோசடியான செயற்பாடு தொடர்பில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்திய போதிலும், இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், பணிப்பாளர் அசமந்தமாக உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயம், அட்டாளைச்சேனை டொக்டர் ஜலால்தீன் வித்தியாலயம் மற்றும் பொத்துவில் அல் – கலாம் வித்தியாலயம் ஆகியவற்றில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும் பொருட்டு, கல்விக் கல்லூரிகளில் விசேட டிப்ளோமா கல்வியை பூர்த்தி செய்தவர்கள், ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயத்திலுள்ள விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக  நியமிக்கப்பட்ட, அதற்குரிய ஆசிரியர்கள், விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பதிலிருந்தும் விலகியுள்ளனர் என்று, பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்துக்கு மேலதிகமாக  விசேட கொடுப்பனவும் அரசினால் வழங்கப்படுகின்றது. மேலும் இவ் ஆசிரியர்களை பிற கற்பித்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தும் நடவடிக்கையினையும் கல்வி அமைச்சு முற்றாக தடைசெய்துள்ளது.

இவ்வாறான நிலையில், அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அங்குள்ள சாதராண மாணவர்களுக்கு கற்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதேவேளை, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும் பொருட்டு தொண்டர் அடிப்படையில் சிலர் பணிகமர்தப்பட்டுள்ளனர். இந்த செயற்பாடானது கற்பித்தல் நடைமுறைக்கு முரணானதாகும்.

மேலும், விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும் பொருட்டு, தொண்டர் அடிப்படையில் இணைக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பவினை வழங்குவதற்காக, விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோரிடமிருந்து பணம் அறிவீடு செய்யப்படுகிறது.

அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயத்தில், விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பில் நடைபெறும் இந்த மோசடியான செயற்பாடுகள் குறித்து, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தப்பட்ட போதிலும், இது தொடர்பில் அவர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், மிகவும் பொடுபோக்காக உள்ளார் எனவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்