மைத்திரி தரப்புக்கு பாரிய இடி; அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேர், மஹிந்த பக்கம் தாவுகின்றனர்

🕔 July 14, 2017

மைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டும் விலகி, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையவுள்ளதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தைகளை கொண்டுள்ளனர்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு ஐ.தே.கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட இரண்டு வருடகால ஒப்பந்தம் எதிர்வரும் ஓகட்ஸ் மாதத்துடன் நிறைவடைகின்றமையினையடுத்து, இவர்கள் மஹிந்த பக்கம் தாவுகின்றனர்.

இதற்கிணங்க, மேற்படி நபர்கள் அரசாங்கத்தை விட்டும் செப்டம்பர் மாதமளவில் விலகிக் கொள்ளவுள்ளதாக, விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அரசாங்கத்தை விட்டும் விலகிக்கொள்ளவிருப்பவர்களில் அதிகமானோர் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்றும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இவ்வாறு அணி மாறுகின்றவர்கள் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள் என்றும், ஆனால் மைத்திரபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் 03 மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ளதன் காரணமாக, அச்சபைகளுக்கான தேர்தல்களை இலக்காக வைத்தே, மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்படி நபர்கள் இணைந்து கொள்ளவுள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது ஆளுந்தரப்பில் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 10 உறுப்பினர்களின் தாவலானது, கூட்டணி ஆட்சியில் எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது என, அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும், இந்த அணிமாற்றமானது, மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினைப் பலவீனப்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்