கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார்

🕔 June 26, 2017

ஜாதிக ஹெல உறுமய கட்சியில் – தான் அங்கம் வகித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உளவாளியாகச் செயற்பட்டதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜாதிக ஹெல உறுமய கட்சியினுள் வேறொரு நபர், உளவாளியாகச் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

“பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்பின் உளவுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர், 1998இல் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்கவுடன் நெருக்கமாக இருந்தார். ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழுவில் இணைக்கப்பட்ட இந்த நபரை, கட்சியின் உயர் நிலைக்கு அமைச்சர் சம்பிக்க நியமித்தார். 2015ஆம் ஆண்டு வரை, இந்த நபரை யார் என அமைச்சரால் கண்டுபிடிக்க முடியவில்லை. உத்தியோகபூர்வமான ஓர் உளவாளி அமைச்சருக்குப் பக்கத்திலேயே இருந்தபோது, நான் உளவாளியாக இருக்க வேண்டிய தேவை என்ன” என்றும் அவர் வினவினார்.

“2014ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 12ஆம் திகதி என்னைச் சந்தித்த அதுரலியே ரத்ன தேரர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நேரம் மைத்திரிபால சிறிசேன ஒத்துக் கொண்டதாக, என்னிடம் கூறினார். பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தன்னை பிரகடனம் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக இது நடந்தது.

ஆனால், ரத்ன தேரர் சொன்ன அந்த விடயத்தை ரகசியமாக வைத்திருப்பதாக நான் உறுதியளித்தேன். உண்மையில், மஹிந்த ராஜபக்ஷவின் உளவாளியாக நான் இருந்திருந்தால், அந்த விடயத்தை மஹிந்தவிடம் கூறி, எனது வெற்றிக்குரிய பொன்னான வாய்ப்பாக அதைப் பயன்படுத்தியிருப்பேன்” எனவும் தெரிவித்தார்.

Comments