அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அரசியல் கட்சியின் நிகழ்வு; அனுமதி வழங்கியோர் தண்டிக்கப்பட வேண்டும்

🕔 June 14, 2017

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வினை, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடத்துவதற்கு இடம் வழங்கியுள்ளமை குறித்து, சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்களும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.

அரச திணைக்களமொன்றின் கீழுள்ள நிறுவனங்களினுடைய காணிகள் அல்லது கட்டடங்களை அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதும், அதனை அனுமதிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆயினும், முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வினை, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச பாடசாலையொன்றினை அரசியல் தேவைகளுக்கு வழங்கக் கூடாது என, தாபன விதிக் கோவையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் சம்மதத்துடன், முஸ்லிம் காங்கிரசின் இப்தார் நிகழ்வினை நடத்துவதற்காக, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் இடம் வழங்கப்பட்டுள்ளமை  குறித்து, இப்பிரதேச புத்திஜீவிகள் தமது விசனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியினை, முஸ்லிம் காங்கிரசின் அரசியல் நிகழ்வொன்றுக்காக அதன் அதிபரும், வலயக் கல்விப் பணிப்பாளரும் வழங்கியுள்ள நிலையில், ஏனைய அரசியல் கட்சிகளும் தமது நிகழ்வுகளை, குறித்த பாடசாலையில் நடத்துவதற்கான அனுமதியினை கோரும் நிலை ஏற்படும். அப்போது, கல்லூரியின் அதிபரும், வலயக் கல்விப் பணிப்பாளரும் எந்தக் காரணத்தைக் கூறி மறுக்கவியலும் என்றும், சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மேலும், சட்டத்துக்கு விரோதமாக அரச நிறுவனமொன்றில் அரசியல் நிகழ்வினை நடத்துவதற்கு அனுமதி வழங்கிய, குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே, இவ் விவகாரம் தொடர்பில், கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வியமைச்சர் ஆகியோரை ‘புதிது’ செய்தித்தளம் தொடர்வு கொண்டு, அவர்களின் கருத்துக்களை அறிந்து, அவற்றினையும் விரைவில் செய்திகளாக வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்