எரிக்கப்படும் முஸ்லிம்களின் கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: நாமல் கோரிக்கை

🕔 June 11, 2017

தொடர்ச்சியாக தீ வைத்து எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இந்த அரசாங்கம் பொறுப்பேற்று  சீர் செய்து வழங்குவதுடன், அவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென நாடாளு உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

ஒவ்வொரு நாளும் குறைந்தது முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு வர்த்தக நிலையமாவது தீ வைத்து எரிக்கப்படுகின்றது. இதனை முஸ்லிம்கள் பெரிய விடயமாக தூக்கி பிடிக்கின்ற போதும், அவர்களை ஆட்சியாளர்கள் யாருமே சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை.

எமது ஆட்சிக் காலத்தில் இப்படியான ஒரு நிலை இருக்கவில்லை. எமது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது, முஸ்லிம்களுக்கு சார்பாக யாராவது ஒருவர் குரல் கொடுப்பார். அப்படி முஸ்லிம்களிடத்தில் நல்ல பெயர் வாங்கியவர்களில் ஒருவர்தான் தற்போது பிரபலமான அமைச்சராகவுள்ள ராஜித சேனாரத்ன ஆவார். இருந்த போதிலும் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்களுடன்தான் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தீயூட்டுபவர்களின் நோக்கம் முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்குவதாகும். இவ்வாறு பற்ற வைக்கப்படும் ஒவ்வொரு கடைகளையும் முன்னர் இருந்தவாறு மீள சீர்செய்து வழங்கும் போது, எரியூட்டுபவர்களின் எண்ணம் தவிடு பொடியாகிவிடும். வேண்டுமென்றே இனவாதிகள் பற்ற வைக்கும் கடைகளை மீள சீர்செய்வதை யாருமே எதிர்க்க மாட்டார்கள்.

மேலும், இனவாதிகள் வேறு வழியின்றி  ஓய்ந்து விடுவார்கள். அல்லது மக்களால் ஓய்வெடுக்கச் செய்யப்படுவார்கள். நாங்கள் இக் கடைகளுக்கான இழப்பீடுகளை தருகின்றோம் என்ற பொய் வாக்குறுதியையாவது இவ்வாட்சியாளர்கள் யாராவது தந்துள்ளார்களா?  மாறாக காப்புறுதிப் பணத்தை பெறுவதற்கு, முஸ்லிம்கள் தங்கள் கடைகளை தாங்களே பற்ற வைக்கின்றார்கள் என்று, மனதை உருக்கும் வார்த்தைகளை அந்த மக்களுக்கு பரிசாக வழங்குவதை அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை எரியூட்டி முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்கும் திட்டம் இன்றைய ஆட்சியாளர்களால் தீட்டப்பட்டிருப்பின், இழப்பீடுகள் வழங்கப்படுமா என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

எமது ஆட்சி காலத்தில் அளுத்கமை கலவரம் இடம்பெற்று முடிந்த ஓரிரு மாதங்களுக்குள், அந்த மக்கள் இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்து புனரமைத்து கொடுத்திருந்தோம். இருந்தாலும் அன்று அந்த மக்களின் உள்ளங்களில் இதன் பின்னால் நாங்கள்தான் உள்ளோம் என்ற அந்த மனோ நிலையை மாற்ற முடியாது போனது. ஏனைய இழப்பீடுகள் தொடர்பான மதிப்பீடுகளை செய்து கொண்டிருக்கும் போது, எங்கள் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அந்த இழப்பீடுகளை நாம் அன்றே மதிப்பீடு செய்து வைத்திருந்த போதும் அவற்றினை இந்த அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை.

இப்படியான அரசாங்கத்திடமிருந்து கடைகள் பற்ற வைக்கப்படும் போது, இழப்பீடுகளை எதிர்பார்க்க முடியாது. தற்போது முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான ரமழான் மாதத்தில் அந்த மக்களை சதா அச்சுறுத்திய வண்ணம் இக் கடை எரிப்புக்கள் அமைந்துள்ளன. இவை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

கடைகளை பற்ற வைக்கும் நபர்கள் சிக்குகின்ற போதும், இதன் பின்னால் உள்ள சக்திகள் இன்னும் வெளிப்படாமல் மறைத்து பாதுக்காப்பதன் பின்னால், இவ்வாட்சியின் முக்கியஸ்தர்கள் இருக்காமல் வேறு எவராகவும் இருக்க முடியாது.

(ஒன்றிணைந்த எதிரணியின் தமிழ் ஊடகப் பிரிவு)

Comments