இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

🕔 May 30, 2017

மிழர் மற்றும் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு  முயற்சித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

மூதூர் மல்லிகை தீவில் மூன்று தமிழ் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறி, அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் உண்மை தன்மையினை அறிய நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று திங்கட்கிழமை அப்பகுதிக்கு விஜயம் செய்த பின் வெளியிடுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பிரத்தியேக வகுப்புக்கு சென்ற மூன்று தமிழ் மாணவிகளை அப்பகுதியில் கட்டிட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பின் தலைமறைவாகியதாக கூறி, அக்கட்டிட ஒப்பந்தகாரரையும் அவரின் உதவியாளரையும் சிலர் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இன்று காலை தலைமறைவானதாக கூறிய இரண்டு இளைஞர்களும் பொலிஸார் முன்னிலையில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிகள், தம்மை துஸ்பிரயோகப்படுத்தியவர்கள் இவர்கள் இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆகவே, இச்சம்பவத்தின் குற்றவாளிகள் யார்? அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது இவ்வாறிருக்க ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இச்சம்பவத்தை முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபடுத்தி இச்செய்தியை திரிபுபடுத்தி வதந்திகள் பரப்பபடுவதன் மூலம், இப்பகுதிகளில் பல வருடகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்துவரும் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் இன நல்லுறவை சீர்குலைக்க சில குழுக்கள் செயற்பாட்டு வருகின்றமை தெளிவாகின்றது.

இதுபோன்று கடந்த சில தினங்களாக இரு சமூகங்களுக்கிடையில் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் பல செயற்பாடுகள் இப்பிரதேசத்தில் அரங்கேற்றப்படுவதை அவதானிக்ககூடியதாகவுள்ளது. உதாராணமாக அண்மையில் தமிழ் மக்களின் பூர்வீக  காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து வருவதாக கூறி, இப்பகுதி தமிழ் மக்கள் தூண்டிவிடப்பட்ட நிலையில் போராட்டங்களில் ஈடுபட்டதையும் கூறலாம்.

அவ்வாறு அவர்களின் பூர்வீக காணிகள் ஏதாவது ஆக்கிரமிக்கப் பட்டிருப்பின் அதற்குரிய ஆதாரங்களுடன் அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இதுவரையில் அவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

ஆகவே தற்போது அப்பகுதியில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைக்க சில  குழுக்கள் சில அமைப்புகளின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக செயற்படுகின்றமை தெளிவாகின்றது. ஆகவே இவர்களின் சூழ்ச்சிகளை முறையடித்து இப்பகுதிகளில் வாழும் இரண்டு சமூகங்களும் தமைக்கிடையில் பல்லாண்டு காலமாக நிலவும் நல்லுறவை பேணி நடக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் சிறுவர்கள் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்படும் வரை, இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் கோரிக்கை விடுக்கிறேன். 

மேலும்  உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுகொடுக்கும் வரை தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்போம்.

Comments