தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு; முஸ்லிம் அமைச்சர்கள் வாய் மூடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு

🕔 May 14, 2017

லங்கையில் தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடு பிடிகளை தளர்த்துமாறு அரசாங்கத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள்  அழுத்தம் கொடுக்க வேண்டுமென பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர்  இபாஸ் நபுஹான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

இன்றைய ஆட்சியில், நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பான  ஒவ்வொரு விடயமும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. எந்த வழிகளில் எல்லாம் முஸ்லிம்களை அடக்க முடியுமோ அத்தனை விடயங்களும் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வாறான செயற்பாடுகளில் ஒன்றாகவே  வெளிநாடுகளில் இருந்து, இலங்கை வரும் தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளதையும் நாம் காண்கிறோம்.

புனித இஸ்லாத்தை பரப்பும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து  தப்லீக் ஜமாத்தினர் இலங்கை வருவது வழமை. இவர்கள் பல ஆண்டு காலமாக இலங்கைக்கு மார்க்கத்தை பரப்பும் நோக்கில் வருகின்றனர். இதற்கு முன்பு ஒரு போதுமில்லாதவாறு இவர்களுக்கு வீசா வழங்குவதில் உள்ள கெடு பிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கை உளவுத் துறை அமைப்பின் கெடு பிடிகளும் தப்லீக் ஜமாத்தின் கொழும்பு மர்கசினுள் அதிகமாக காணப்படுவதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் தப்லீக் ஜமாத்தினரின் செயற்பாடுகளினூடாக இஸ்லாம் பலரை சென்றடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறு இலங்கை அரசு செய்வதனூடாக இஸ்லாம் மார்க்கம் பரப்பப்படுவதை தடுத்தல் அவர்களது சிந்தனையாக இருக்கலாம்.

இதனை இயக்க வெறி பிடித்த சிலர் கணக்கில் எடுக்காமல் விடலாம். முஸ்லிம் என்ற காரணத்தால் இது நடைபெறுவதால் இதனை முஸ்லிம்கள் இலகுவாக கணக்கிட முடியாது. இந்த அரசாங்கம் தனது இனவாத முகத்தை பல வடிவங்களில் வெளிப்படுத்துகின்றது. இருந்தபோதும் முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்களின் வால் பிடித்தே அலைவது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறான விடயங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்கு அறிந்திருந்தும் மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மௌனமாக உள்ளார்கள் என்பதே உண்மையாகும். இது முன்னாள் ஜனாதிபது மஹிந்த ராஜபக்ஸவுடைய ஆட்சி காலத்தில் நடந்தேறி இருந்தால், ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தனக்கு முன்பாகஆயிரக்கணக்கான மைக்குகளை வைத்து, முன்னாள் ஜனாதிபதியை முஸ்லிம்களின் எதிரியாக எந்தெந்த வடிவில் எல்லாம் காட்ட முடியுமோ காட்டி இருப்பார்கள். இன்று அவர்கள் இவ்வாட்சியின் பங்குதாரர்களாக இருப்பதால் இதனை வெளிப்படுத்தவில்லை.

இலங்கைக்கு வரும் தஃவா பணியாளர்களை திருப்பி அனுப்பாமல், அவர்களுக்கு வீசா வழங்கக்கூடிய ஒரு பொறி முறையை உடனடியாக உருவாக்க வேண்டும். அதை விடுத்து அரசாங்கத்தின் உள்ளே இருக்கும் அமைச்சர்கள், ஆள் மாறி ஆள் அறிக்கை விடுவதனால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்