சைட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தம் ஆரம்பம்; பல்வேறு துறைகள் கை கோர்த்தன

🕔 May 5, 2017

‘சைட்டம்” எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரியை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 03 கோரிக்கைகளை முன்வைத்து, பல துறைகளில் இன்று காலை தொடக்கம் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக அரச மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் மேற்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், புகையிரத திணைக்களத்தின் இரண்டு தரங்களைக் கொண்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, லோகோமோட்டிவ் பொறியியல் புகையிரத செலுத்துனர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை 08 மணி தொடக்கம் சில புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்படி சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

எனினும், புகையிரத போக்குவரத்து சேவையில் இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் பயணிகளுக்கு பாதிப்புகள் இன்றி போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்றைய வேலை நிறுத்தத்தில் தாம் இணைந்து கொள்ளவில்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன அறிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையைச் சார்ந்த அகில இலங்கை போக்குவரத்து சங்கமும் இன்றைய போராட்டத்தில் இணையவில்லை என தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அரச வைத்தியசாலைகளிலுள்ள அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சேவைகள் நிறுத்தப்பட மாட்டாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படும் பட்சத்தில் மாத்திரம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்