முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு

🕔 April 27, 2017

– முன்ஸிப் –

டக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும், கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்  அனுஷ்டிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

வட மாகாணத்தை மையப்படுத்தி செயற்பட்டு வரும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலை இன்றைய தினம் நடைமுறைப்படுத்த இயலவில்லை.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை மற்றும் இறக்காமம் உள்ளிட்ட பல பகுதிகளில் வியாபார நிலையங்கள் திறந்திருந்ததோடு, போக்குவரத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றன. முஸ்லிம் பகுதிகளில் அரச நிறுவனங்கள் இயங்குவதோடு, வங்கி நடவடிக்கைகளும் வழமைபோல் நடைபெறுகின்றன. மேலும், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளும் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவில்லை.

இதேவேளை, முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள வர்த்தக சங்கங்களுடன் ஹர்த்தால் அனுஷ்டிப்பது தொடர்பில், அதன் ஏற்பாட்டாளர்கள் எவரும் தொடர்புகொண்டு பேசவில்லை எனவும் அறிய முடிகிறது.

முஸ்லிம் பகுதிகளிலும் இன்றைய ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த போதும், முஸ்லிம் மக்கள் ஹர்த்தால் நடவடிக்கையினை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்