அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை இடம் மாற்றுவதென தீர்மானம்

🕔 April 18, 2017
– எம்.ஜே.எம். சஜீத் –

ட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை, பொருத்தமான இடமொன்றுக்கு மாற்றுவதென, அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில், இன்று செவ்வாய்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் ரி. அதிசயராஜ் ஒருங்கிணைப்பில், நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இவ்வருடம் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், கிராமத்துக்கு ஒரு வேலை எனும் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டு அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன.

மேலும், அட்டாளைச்சேனை 16ஆம் பிரிவில் அமைந்துள்ள மடுவம் மற்றும் அட்டாளைச்சேனை பொதுநூலகத்துக்கு முன்னால் உள்ள மீன் சந்தை என்பனவற்றை பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் ஒலுவில் அஷ்ரப் நகரில் அமைக்கப்பட்டுள்ள திண்மக் கழிவு சேகரிக்கும் இடம் தொடர்பில் இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டு, எதிர்வரும் காலங்களில் அதனை முறையாக செயற்படுத்துவதெனவும், யானை வேலி அமைக்கப்பட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி கருதி டொக்டர் ஜலால்தீன் வீதியில் குடாக்கரை கிழல் கண்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சதுப்பு நில காணியில் 20 ஏக்கரை சுவீகரித்து, பிரதேசத்தின் அப்பிரதேசத்தின் மிக முக்கிய காரியாலக் கட்டடங்களை அமைப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

“>

Comments

புதிது பேஸ்புக் பக்கம்