மூன்று மாதங்களின் பின்னர், விமலுக்குப் பிணை

🕔 April 7, 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ன முன்னிலையில், விமல் வீரவன்ச ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 05 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விமல் வீரவன்சவினுடைய மகளின் உடல் நிலை உள்ளிட்ட சில விடயங்களைக் கருத்திற்கொண்டு, அவருக்கு மேற்படி பிணையினை நீதவான் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், விமல் வீரவன்ச வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில், தனக்கு பிணை வழங்குமாறு விமல் வீரவன்ச பல தடவை மனுச் செய்திருந்த போதிலும், அந்தப் பிணை மனுக்களை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்த நிலையில், சிலைச்சாலையினுள் இருந்தவாறே – விமல் வீரவன்ச தனக்கு பிணை வழங்குமாறு கோரி உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்