ஆச்சரியப்பட வைத்த அரசாங்க அதிபர்; ஓய்வினையடுத்து, பஸ்ஸில் வீடு திரும்பினார்

🕔 April 4, 2017

னது பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்ற மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர், பஸ்ஸில் வீடு சென்ற சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய டி.பி.ஜி. குமாரசிறி, நேற்று திங்கட்கிழமை, தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

சுமார் 33 வருட சேவைக் கால அனுபவத்தினைக் கொண்ட மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர், நேற்று சேவையிலிருந்து ஓய்வு பெற்றமையினை அடுத்து, தனது அலுவலக வாகனம் மற்றும் ஆவணங்களை பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்த பின்னர், அலுவலகத்திலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பினார்.

பொது நிருவாக சேவையில் நீண்ட கால அனுபவமுடைய குமாரசிறி – அனுராதபுரம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பணியாற்றியுள்ளார்.

பொறுப்பு வாய்ந்த அரச பதவிகளிலுள்ள பலர், அந்தப் பதவிகள் மூலமாக தமது பொருளாதாரத்தினை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமுடையவர்களாக உள்ள, தற்போதைய கால கட்டத்தில், மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய குமாரசிறி – கௌரவத்துக்கும் பாராட்டுதல்களும் உரியவராவார்.

Comments