ஹக்கீமுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை: ஹசனலி உறுதி

🕔 March 16, 2017

– அகமட் சஹ்ரான்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுடன் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.

மு.கா. தலைவருடன் ஹசனலி இணைவதற்கு முடிவு செய்துள்ளதாக சில இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும்  அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“கட்சியை சீர்செய்வதற்கான போராட்டத்தையே நாங்கள் நடத்தி வருகின்றோம். அதன்படி பிரதேச வாரியான கூட்டங்களை நடத்துகின்றோம். தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கையில், அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் சார்பில் என்னைத் தொடர்பு கொண்டார்கள். கட்சியை மறுசீரமைக்கும் போராட்டம் தீவிரமாக போய்க் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர்கள், அடுத்த கூட்டத்திற்கு முன்னர் எம்மைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மு.கா. என்பது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான கட்சியாகும். அத்துடன் இப்போது கட்சிக்குள் இடம்பெற்றுள்ள தவறுகள் மார்க்க அடிப்படையிலும் படுபாதகமானவை ஆகும். எனவே, இவ்விடயத்தில் மார்க்க அமைப்பு ஒன்றின் ஈடுபாட்டை நாம் வரவேற்கின்றோம். ஆனால், நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலில் மௌலவிமார், உலமா சபையினரின் நிலைப்பாட்டையும் தீர்ப்பையும் அறிய விரும்புகின்றோம். எனவே, எம்மிடம் உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்களோடு பேசுவதற்கான எமது சம்மதத்தை தெரிவித்துள்ளோம். ஆனால் இன்னும் சந்திப்புக்கான நேரம் குறிக்கப்படவில்லை. அதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.

இது மக்களின் கட்சி. எல்லாவற்றுக்கும் துணிந்தும், உறுதியான முடிவோடுதான் இந்த முன்னெடுப்பில் எமது அணியினர் களமிறங்கியுள்ளோம். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை நாம் பின்வாங்கப் போவதில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்