அப்பம்

🕔 March 15, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

ம்ரா கடமைக்கான பயணத்தினை மேற்கொள்ளும் பொருட்டு, கடந்த வாரம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சஊதி அரேபியா செல்லவிருந்தார். தலைவரை வழியனுப்பி வைப்பதற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும், அவரின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதன்போது, சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரும் அங்கு வந்தார். தலைவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார். பின்னர் தலைவர் ஹக்கீமிடம், தனது சார்பாக உம்ரா கடமையின் போது மக்காவில் வைத்து பிரார்தனையொன்றினைச் செய்யுமாறு கபூர் வேண்டிக் கொண்டார். ‘அட்டாளைச்சேனைக்கு மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கும், அவ்வாறு வழங்கப்படும் போது, அந்தப் பதவி எனக்குக் கிடைப்பதற்கும் பிரார்த்தியுங்கள்’ என்றார் கபூர். மு.கா. தலைவர் இதை எதிர்பார்க்கவேயில்லை. ‘கவலைப்பட வேண்டாம்’ என்று சொல்லி, சட்டத்தரணி கபூருடைய தோளில், மு.கா. தலைவர் தட்டிக் கொடுத்தார்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.காங்கிரஸ் வழங்கவுள்ளது என்கிற செய்தி, கடந்த வாரம் ஊடகங்களில் பற்றியெரிந்தது. இதனையடுத்து, அட்டாளைச்சேனையில் தேசியப்பட்டியலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நபர்கள், மு.கா. தலைவரின் வீட்டுக்குப் படையெடுத்தனர். சட்டத்தரணி கபூரும் அந்த வரிசையில்தான் சென்றார். ‘அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவேன்’ என்று, கடந்த பொதுத் தேர்தல் பிரசார மேடைகளில் மு.கா. தலைவர் ஹக்கீம், மிகப் பகிரங்கமாக வாக்குறுதியளித்திருந்தார்.

கபூர் எனும் ஸ்தாபகர்

மு.காங்கிரசின் ஸ்தாபகர்களில் சட்டத்தரணி கபூரும் ஒருவர். அவர் அந்தக் கட்சியின் முதலாவது செயலாளராவார். முஸ்லிம் காங்கிரஸ் முதன்முதலாகப் போட்டியிட்ட பொதுத் தேர்தல் தொடக்கம், இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தல் வரையிலும், அந்தக் கட்சியின் சார்பிலும், அதன் சகோதர கட்சியான நுஆ சார்பிலும் தேசியப்பட்டியல் வேட்பாளராக கபூருடைய பெயர் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மு.கா.வின் உயர்பீட உறுப்பினராகவும் கபூர் பதவி வகிக்கின்றார். ஆனாலும், ஒரு தடவை கூட – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கபூர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், அட்டாளைச்சேனையில் தனக்கு தேசியப்பட்டியல் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்குமாறு, மு.கா. தலைவரிடம் கபூர் கேட்டுக் கொண்டார்.

சமூகத்திலுள்ள புத்திஜீவிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளீர்த்து, அவர்களின் திறமைகளை நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை உருவாக்கப்பட்டது. அந்த வகையில் பார்த்தால், மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை அட்டாளைச்சேனை சார்பில் பெறுவதற்கு சட்டத்தரணி கபூர் பொருத்தமான நபராவார். ஆனால், அந்த சந்தர்ப்பத்தினை கபூருக்கு மு.கா. தலைவர் வழங்குவாரா என்று கேட்டால், அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே தெரிகிறது.

தலைவரின் விசுவாசி பளீல் பி.ஏ

அட்டாளைச்சேனையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களில் மற்றொருவர் எஸ்.எல்.எம். பளீல். இவர் அட்டாளைச்சேனையின் முதலாவது கலைத்துறைப் பட்டதாரி. அதனால் இவரை பளீல் பி.ஏ. என்றுதான் அழைப்பார்கள். இவரும் மொழிப்புலமையுள்ள படித்த மனிதர். மு.கா.வின் உயர்பீட உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார். கிழக்கு மாகாண சபைக்கான கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தார். ஆனால், வெற்றிபெறவில்லை. இவை அனைத்துக்கும் அப்பால் – இவர் மு.கா. தலைவரின் தீவிர விசுவாசிகளில் ஒருவராவார். ‘அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.கா. வழங்கினால், அது எனக்கே கிடைக்க வேண்டும்’ என்று, கிட்டத்தட்ட ஒற்றைக் காலில் நிற்பவர் பளீல். ஆனால், இவருக்கும் ‘தேசியப்பட்டியல்’ கிடைப்பதற்கு சாத்தியங்கள் குறைவாகவே தெரிகின்றன.

நசீருக்கான வாய்ப்பு

இந்த நிலையில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகிக்கும் ஏ.எல்.எம். நசீருக்கே, மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைப்பதற்கு சாத்தியங்கள் அதிகமுள்ளது என்று கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நசீரைத் தவிர்த்து விட்டு, வேறொரு நபருக்கு அட்டாளைச்சேனையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைக் கொடுப்பதற்கு மு.கா. தலைவர் துணிவாரா என்கிற சந்தேகமும் உள்ளது.

சட்டத்தரணி கபூர் மற்றும் பளீல் ஆகியோருடன் ஒப்பிடுகையில் கல்வித் தகைமையில் நசீர் மிகவும் பின்னிற்கின்றார். ஆனால், பணம் மற்றும் படைபலம் ஆகியவற்றினை வைத்துக் கொண்டு, களத்தில் நின்று செயற்பாட்டு அரசியலைச் செய்வதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் கில்லாடி. 2011ஆம் ஆண்டு திடீரென அரசியலுக்குள் நசீர் நுளைந்தார். அதே வருடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகி, 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றார். இப்போது மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். 20 வருடங்களுக்கு முன்னர், நசீர் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்.

கடந்த வாரம் நசீரை கொழும்புக்கு அiழைத்த மு.கா. தலைவர் ஹக்கீம்; நசீரிடம் அவரின் அமைச்சு வேலைகளையெல்லாம் விரைவில் செய்து முடிக்குமாறு தெரிவித்தார் என, சில இணையத்தளங்கள் எழுதுகின்றன. மு.கா. தலைவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான நெருக்குவாரத்தை எதிர்கொள்வதற்கு, நசீரைப் போன்ற உள்ளுர் அரசியல்வாதிகள்தான் இப்போது தேவையாக இருக்கின்றனர். அண்மையில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நிந்தவூரில் கலந்து கொண்ட கூட்டமொன்றில் உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர்; ‘முடிந்தால், ஹசனலி தரப்பினர் அட்டாளைச்சேனையில் ஒரு கூட்டத்தை நடத்திக் காட்டட்டும்’ என்று சவால் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படியான உள்ளுர் அரசியல்வாதிகளை இப்போதைக்கு இழப்பதற்கு ஹக்கீம் துணிய மாட்டார். அதனால், அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, நசீருக்குக் கிடைப்பதற்கே அதிக சாத்தியங்கள் உள்ளன.

குறி வைக்கப்படும் சுகாதார அமைச்சர் பதவி

அதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நசீர் பெற்றுக் கொள்ளும் போது, கிழக்கு மாகாணசபையில் அவர் வகிக்கும் உறுப்பினர் பதவி காலியாகும். அதன்போது அந்த வெற்றிடத்துக்கு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த இறக்காமத்தைச் சேர்ந்த ஜெமீல் காரியப்பர் தெரிவாவார். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட இறக்காமம் பிரதேசத்திலிருந்து தேர்தலொன்றின் மூலம் மாகாணசபை உறுப்பினரொருவர் தெரிவு செய்யப்படுவதற்கு சாத்தியங்கள் மிகவும் குறைவாகும். எனவே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நசீருக்குக் கொடுக்கும் போது, மாகாண சபை உறுப்பினரொருவரைப் பெற்றுக் கொள்ளும் அதிஷ்டத்தை இறக்காமம் மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ளும். இறக்காமத்துக்கு இப்படியொரு சந்தர்ப்பத்தைக் கிடைக்கச் செய்வதற்காகவும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை நசீருக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் அநேகமாகக் கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரத்தினை நசீர் மூலமாக மு.கா. தலைவர் முடித்து வைத்தாலும், இன்னுமொரு பிரச்சினையை ஹக்கீம் உடனடியாக எதிர்கொள்வார். நசீர் வகிக்கும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்குவது என்பதே அந்த சிக்கலாகும். கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சுப் பதவியினை மு.கா. சார்பில் ஏற்கனவே, சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஐ.எம். மன்சூர் வகித்திருந்தார். இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மன்சூர் – நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். இதனையடுத்து மன்சூர் வகித்த சுகாதார அமைச்சர் பதவியினை மு.காங்கிரசின் மாகாணசபை உறுப்பினரான அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல். தவம் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் பதவி அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நசீருக்கு வழங்கப்பட்டது. இப்போது நசீர் நாடாளுமன்ற உறுப்பினரானால், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவி, மு.கா.வுக்குள் யாருக்கு வழங்கப்படும் என்கிற அனுமானங்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.

வழமைபோல், இம்முறையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியினை அக்கரைப்பற்றைச் சேர்ந்த தவம் குறிவைத்து செயற்பட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது. அக்கரைப்பற்றில் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மத்திய அரசாங்கத்தில் பலம்வாய்ந்த ஓர் அமைச்சராக இருந்தார். ஆனால், கடந்த போதுத் தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டு விட்டார். எனவே, அக்கரைபற்று இழந்த அரசியல் அதிகாரத்தை, தவத்தினூடாக மு.கா. நிறைவேற்ற வேண்டும் என்பது தவம் சார்பானவர்களின் கோரிக்கையாகும்.

ஜவாத் பக்கம் வீசும் காற்று

இன்னொருபுறம், கிழக்கு மாகாணசபையின் சிரேஷ்ட உறுப்பினரும், மு.கா.வின் ஆரம்ப கால செயற்பாட்டாளரும், அந்தக் கட்சியின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத்துக்கே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்படுதல் வேண்டும் என்கிற பேச்சுக்களும் உள்ளன. கடந்த காலங்களில் மு.கா. தலைவருடன் கருத்து ரீதியான முரண்பாடுகளை மிக அதிகமாகவே ஜவாத் கொண்டிருந்தார். ஆனால், கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவினையடுத்து, மு.கா. தலைவரின் பக்கமாக ஜவாத் சாய்ந்துள்ளதோடு, கிழக்கு மாகாண முதலமைச்சரும் கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீருடன் நெருக்கத்தினையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதன் வெளிப்பாடாக, மு.கா. தலைவர் ஹக்கீம் மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் ஆகியோரை நியாயம் காணும் வகையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்படாத உண்மைகள்’ எனும் புத்தகத்தை ஜவாத் பதிப்பாக்கம் செய்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியினை ஜவாத்துக்கு வழங்காமல் விடும் தீர்மானமொன்றினை, மு.கா. தலைவர் எடுப்பாரா எங்கிற கேள்வியும் இங்கு உள்ளது. கட்சிக்குள் தனக்கு எதிராக தோன்றியுள்ள எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கே மு.கா. தலைவர் ஹக்கீம் திணறுகின்ற நிலையில், ஜவாத்தின் மனக் கசப்பினை சம்பாதித்துக் கொள்ள விரும்ப மாட்டார். இன்னொருபுறம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீருக்கும், மாகாணசபை உறுப்பினர் தவத்துக்குமிடையில் ஆரோக்கியமான உறவுகளில்லை. அடிக்கடி அவர்களுக்குள் உரசல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவி தவத்துக்குக் கிடைப்பதை விடவும், தன்னுடன் நெருக்கமாகவுள்ள ஜவாத்துக்கு கிடைப்பதையே ஹாபிஸ் நசீரும் விரும்புவார். அதனால், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவிக்கான காற்று, ஜவாத் பக்கமாகவே அதிகம் வீசும் சாத்தியமுள்ளது.

முட்டுக்கட்டை

இருந்தபோதும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி ஜவாத்துக்குக் கிடைப்பதற்கு மு.கா.வின் பிரதித் தலைவரும், பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் அனுமதிக்க மாட்டார் என்கிற பேச்சும் கட்சிக்குள் உள்ளது. ஜவாத்தும் ஹரீசும் கல்முனையைச் சேர்ந்தவர்கள். மு.காங்கிரஸ் சார்ந்து தமது அரசியலை இவர்கள் இருவரும் செய்து வருகின்றபோதும், ஒருபோதும் இவர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டதில்லை. ஜவாத்தும் ஹரீசும் கல்முனைக்குள் பிரிந்து நின்றுதான் தமது அரசியலை இன்றுவரை செய்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், ஜவாத்துக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவி கிடைப்பதற்கு ஒருபோதும் ஹரீஸ் விரும்ப மாட்டார் என்று, கட்சிக்குள்ளேயே பேசிக்கொள்கின்றனர். ஆனால் ஹசீரின் பேச்சை மு.கா. தலைவர் செவியேற்பாரா என்கிற கேள்வியொன்று உள்ளது. அண்மைக் காலமாக பிரதியமைச்சர் ஹரீஸ் தொடர்பில் மு.கா. தலைவர் ஹக்கீம் பெரும் அதிருப்தியினை வெளியிட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பிரதியமைச்சர் ஹரீசை குற்றம்சாட்டி மு.கா. தலைவர் ஹக்கீம் பேசியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துக் பார்க்கையில், அட்டாளைச்சேனைக்கான மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, தற்போதைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீருக்குக் கிடைப்பதற்கான சந்தர்பங்கள் அதிகமாக உள்ளன. அதேவேளை, நசீர் வகிக்கும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி ஜவாத்துக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன.

பார்த்துக் கடக்க வேண்டிய பாதகங்கள்

எவ்வாறாயினும், நசீருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டாலும், அந்தப் பதவியினை முழுமையாக அனுபவிக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்காது. மு.கா.வுக்கு தற்போது இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் உள்ளன. அவை சுழற்சி முறையில் வழங்கப்படும் என்று, ஏற்கனவே ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஆயுட்காலம் ஐந்து வருடங்களாகும். தற்போது ஒன்றரை வருடம் முடிந்து விட்டது. மூன்றரை வருடங்கள் எஞ்சியுள்ளன. இதில் நசீருக்கு ஒன்றரை அல்லது இரண்டு வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படலாம். எதிர்வரும் செப்டம்பர் மாதம் கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடைகிறது. எனவே, இன்னும் ஆறு மாதத்தில் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறலாம். அப்படியொரு தேர்தல் நடைபெறும் போது, நசீர் – நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார். எனவே, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார். அதன்பின்னர், தனக்கு வழங்கப்பட்ட இரண்டு அல்லது ஒன்றரை வருட காலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் கழித்து விட்டு, நசீர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்து கொடுக்க வேண்டியேற்படும். அதாவது, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு ஆகக்குறைந்தது ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில், தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை நசீர் துறக்க வேண்டியேற்படும். அந்த நிலையொன்று ஏற்படுமானால், நசீர் – எந்தவொரு சபையிலும் பிரதிநிதித்துவமற்றிருக்கும் நிலை ஏற்படும். அரசியலில் வெறும் ஆளாக அவர் நிற்கும் நிலை உருவாகும்.

எனவே, அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நசீருக்கு மு.காங்கிரஸ் வழங்க முன்வரும் போது, அந்தப் பதவியின் முழுமையான காலத்தினையும் தனக்கு வழங்க வேண்டும் என்று நசீர் கோர வேண்டும். அவரின் அரசியலைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, அவ்வாறானதொரு கோரிக்கைதான் கை கொடுக்கும். அதேவேளை, தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பமும் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் மு.கா. தலைமையிடம் வாக்குறுதியொன்றினை நசீர் பெற்றுக் கொள்தல் அவசியமாகும். இல்லையெனில், நசீருடைய அரசியல் வாழ்க்கை எப்படி செங்குத்தாக உயர்ந்து சென்றதோ, அதே போன்று, கீழே இறங்கி விடும் அபாயமுள்ளது.

இதேவேளை, நசீருக்கு ‘தேசியப்பட்டியல்’ வழங்கப்படுமாயின், அட்டாளைச்சேனையில் ‘தேசியப்பட்டியலுக்காக’ காத்திருக்கும் சட்டத்தரணி கபூர் மற்றும் பளீல் ஆகியோர் மு.கா. தலைவருடன் கோபித்துக் கொள்வார்கள். ஆனால், அந்தக் கோபம் மு.கா. அரசியலில் எந்தவிதத் தாக்கத்தினையும் ஏற்படுத்தாது. அதேபோன்று, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி கிடைக்காத கோபம் தவத்துக்கும் இருக்கும். ஆனால், அதனை ஹக்கீமிடம் நேரடியாக தவம் காட்ட மாட்டார். அப்படிக் காட்டுவது தவத்தின் அரசியலுக்கு நலவாக இருக்காது.

அந்தவகையில், அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரத்தை மு.கா. தலைவர் நிறைவேற்றி விட்ட பிறகு, விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், மிக மோசமானதொரு அவஷ்தையுடன் சிலர் தமது அரசியலைத் தொடர வேண்டியிருக்கும். அந்த அவஷ்தையானது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகவும் வலி கொண்டதாகவும் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையானதாகும் தெரியக்கூடும்.

மு.கா. தலைவரை இந்த விவகாரத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் நொந்து கொள்ள முடியாது. ஓர் அப்பத்தை அதிகபட்சம் அந்த மனிதரால் எத்தனை பேருக்குத்தான் பங்கிட முடியும்.

நன்றி: தமிழ் மிரர் (14 மார்ச் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்